ADDED : செப் 21, 2024 05:53 AM
மதுரை: பசு, எருமைகளில் கருச்சிதைவு மற்றும்மலட்டுத்தன்மை ஏற்படுவதை தடுக்க 'புருசெல்லா' தடுப்பூசி செலுத்த வேண்டும் என கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துஉள்ளது.
புருசெல்லா அபார்டஸ் பாக்டீரியாவால் கருச்சிதைவு, மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. நோய் பாதித்த கால்நடைகளுக்கு தீவிர காய்ச்சலும், 5 முதல் 8 மாத கால கர்ப்பத்தில் கருச்சிதைவும் ஏற்படும். நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் சினை பிடிக்காத நிலை, பால் உற்பத்தி குறைவு பிரச்னைகள் ஏற்படும்.
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் சார்பில் மாவட்டத்தில் 11ஆயிரத்து 330 கிடேரி கன்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. 4 முதல் 8 மாத கன்றுகளுக்கு முகாம் மூலம் கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் தடுப்பூசி செலுத்தலாம். ஒரு முறை செலுத்தினால் ஆயுள் முழுவதும் இந்நோய் பாதிக்காது.
காளைக் கன்று, சின்ன மாடுகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தக்கூடாது என துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.