ADDED : மார் 31, 2026 10:26 PM

சோழவந்தான்: நெடுங்குளத்தில் 'பைப்லைன்' பதிக்கும் பணிகளால் அப்பகுதியினர் குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். அப்பகுதி சுப்ரமணியன் கூறியதாவது: ஒரு மாதத்திற்கும் மேலாக இப்பகுதியில் குடிநீர் வடிகால் வாரியத்தின் வைகை கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக பள்ளம் தோண்டி குழாய்கள் பதிக்கும் பணிகள் நடக்கிறது. தோண்டிய பள்ளங்களை முறையாக சீரமைப்பதில்லை. பல நாட்களாக திறந்த நிலையில் கிடக்கிறது.
கால்நடைகள், குழந்தைகள், முதியோர் விழுந்து காயமடைகின்றனர். பள்ளம் தோண்டும் போது ஏற்கனவே குடிநீருக்காக பதித்த ஊராட்சி குழாய்கள் சேதமடைந்ததால் ஒருவாரமாக தண்ணீரின்றி தவிக்கிறோம். முறையாக சீரமைக்காததால் அடிக்கடி குழாய்கள் சேதமடைகின்றன.
இதற்காக அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனில்லை. மெத்தனப் போக்குடன் செயல்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
