/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'நாங்க தயாரா இருக்கோம்' : மதுரை சித்திரை திருவிழாவிற்காக மாநகராட்சி
/
'நாங்க தயாரா இருக்கோம்' : மதுரை சித்திரை திருவிழாவிற்காக மாநகராட்சி
'நாங்க தயாரா இருக்கோம்' : மதுரை சித்திரை திருவிழாவிற்காக மாநகராட்சி
'நாங்க தயாரா இருக்கோம்' : மதுரை சித்திரை திருவிழாவிற்காக மாநகராட்சி
ADDED : ஏப் 11, 2025 05:50 AM

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு 30 லட்சம் பக்தர்களுக்கு குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
இத்திருவிழா ஏப்.,29ல் மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மே 6 பட்டாபிஷேகம், 8ல் திருக்கல்யாணம், 9ல் தேரோட்டம் என கோலாகல நிகழ்ச்சிகளுக்கு இடையே மே 12ல் சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவம் காலை 5:45 மணி முதல் 6:05 மணிக்குள் நடக்கிறது. இந்நிகழ்வுகளில் கடந்தாண்டு 25 லட்சம் பக்தர்கள் பங்கேற்ற நிலையில் இந்தாண்டு 30 லட்சம் பேர் பங்கேற்க வாய்ப்புள்ளதால் அதற்கு ஏற்ப குடிநீர், சுகாதாரம், மருத்துவ முகாம்கள் மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு அதற்கான பணிகளை துவங்கியுள்ளது.
அதிகாரி ஒருவர் கூறியதாவது: சித்திரை திருவிழாவின்போது துாய்மை பணிகள் மேற்கொள்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும். மதுரையில் 3500 துாய்மை பணியாளர்கள் உள்ள நிலையில், திருநெல்வேலி, துாத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சிகளில் இருந்து துாய்மைப் பணியாளர்கள், தேவையான கூடுதல் வாகனங்கள் கொண்டுவரப்பட உள்ளன. ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை குப்பையை அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டில் 70 இடங்களில் மருத்துவ முகாம் நடந்தது. இந்தாண்டு 80க்கும் மேற்பட்ட இடங்களில், நடமாடும் மருந்துவ முகாம் ஏற்பாடு செய்ய கமிஷனர் சித்ரா ஆலோசனை வழங்கியுள்ளார். வெயிலை சமாளிக்க பல்வேறு இடங்களில் நிழற்குடைகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி, அறநிலையத் துறை, பொதுப்பணித்துறை என இத்திருவிழாவிற்காக அரசு துறைகள் கடந்தாண்டு ரூ.95 லட்சம் செலவிடப்பட்ட நிலையில், இந்தாண்டு ரூ. ஒரு கோடி வரை செலவாகும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

