குன்றத்தில் திருக்கல்யாண கோலாகலம் இன்று தேரோட்டம்
குன்றத்தில் திருக்கல்யாண கோலாகலம் இன்று தேரோட்டம்
ADDED : ஏப் 05, 2026 04:52 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் நேற்று கோலாகலமாக நடந்த சுப்பிரமணிய சுவாமி-, தெய்வானை திருக்கல்யாணத்தை தொடர்ந்து, இன்று (ஏப். 5) காலை 6:00 மணிக்கு கிரிவலப் பாதையில் தேரோட்டம் நடக்கிறது.
பெற்றோருக்கு வரவேற்பு நேற்று அதிகாலை சுவாமி, தெய்வானை மூலக்கரை சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். முன்னதாக மதுரை கோயிலில் இருந்து புறப்பாடாகிய மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் மூலக்கரை சந்திப்பு மண்டபம் வந்தனர். ஆறுகால் பீடத்தில் தங்கம், வெள்ளிக் குடங்களில் புனித நீர் நிரப்பி பூஜை நடந்தது. மாப்பிள்ளை பிரதிநிதியாக அசோக் சிவாச்சாரியார், பெண் பிரதிநிதியாக அஜித் சிவாச்சாரியார் திருமண சடங்குகளை நடத்தினர்.
திருக்கல்யாணம் மதியம் 12:51 மணிக்கு நடந்தது. இரவு 7:00 மணிக்கு 16 கால் மண்டபம் முன்பு வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி, பூப்பல்லக்கில் தெய்வானை எழுந்தருளினர்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையிடம் விடைபெறும் நிகழ்ச்சி முடிந்து வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. கோயில் துணை கமிஷனர் ஞானசேகரன், அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச் செல்வம், பொம்ம தேவன், ராமையா பங்கேற்றனர்.
திருக்கல்யாண சீர்வரிசை சோலைமலை முருகன் கோயிலில் இருந்து இணை கமிஷனர் ஹரிஹரன், கண்காணிப்பாளர் அங்கயற்கண்ணி தலைமையில் பட்டாடைகள் உள்ளிட்ட பொருட்கள் சீர்வரிசையாக கொண்டு வரப்பட்து. இன்று காலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
