/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை அரசு மருத்துவமனையில் எடையை குறைக்க சிகிச்சை
/
மதுரை அரசு மருத்துவமனையில் எடையை குறைக்க சிகிச்சை
ADDED : மார் 07, 2025 04:38 AM

தொற்றா நோய்களில் உடற்பருமன் முக்கிய பிரச்னையாக உள்ளது. பருமனாக உள்ளவர்களுக்கு இன்சுலின் சுரப்பதும், சுரப்பியின் தரமும் குறைந்து விடும். இதனால் சர்க்கரை நோய் உருவாகும். இதயத்திற்கு ரத்தத்தை கடத்தும் திறனில் சிரமம் ஏற்படும். ரத்த செல்களில் கொழுப்பு படிவதற்கும் வாய்ப்புள்ளது. இந்த மூன்றும் சேரும் போது பக்கவாதம், மாரடைப்பு, கல்லீரல் திசுக்களில் வீக்கம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
உடற்பயிற்சி அவசியம் என்பதோடு உணவு, உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்க முடியாதவர்களுக்கு 'பேரியாட்டிக் சர்ஜரி' செய்ய டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். சென்னை ராஜிவ்காந்தி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் இந்த அறுவை சிகிச்சை உள்ள நிலையில் கோவை, சேலம், மதுரை அரசு மருத்துவமனைகளிலும் துவங்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. டாக்டர்கள், நர்ஸ்கள் பயிற்சி பெற்ற நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் குடல் இரைப்பை அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை துறை பல்நோக்கு சிறப்பு வளாகத்தில் (எஸ்.எஸ்.பி.,) துவங்கப்பட உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: குடல் இரைப்பையின் அளவை குறைக்கும் போது உணவு சாப்பிடும் அளவும் குறைந்து விடும். இதனால் உடல் எடை குறைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இங்கு தனிவார்டு அமைத்து படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்து கூடுதல் பணியாட்கள் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது முதல்வரின் இலவச காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளது என்றனர்.