/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
என்னய்யா ஆட்சி பண்றீங்க... காங்கிரஸ்காரன் கேட்கிறேன்: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கொந்தளிப்பு
/
என்னய்யா ஆட்சி பண்றீங்க... காங்கிரஸ்காரன் கேட்கிறேன்: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கொந்தளிப்பு
என்னய்யா ஆட்சி பண்றீங்க... காங்கிரஸ்காரன் கேட்கிறேன்: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கொந்தளிப்பு
என்னய்யா ஆட்சி பண்றீங்க... காங்கிரஸ்காரன் கேட்கிறேன்: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கொந்தளிப்பு
ADDED : நவ 28, 2025 08:23 AM

மதுரை: மதுரையில் நடந்த விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விவசாயி மணிகண்டன் பேச எழுந்த போது, தி.மு.க.,வை சேர்ந்த விவசாயி செல்வம் குறுக்கிட்டதால், 'என்னய்யா ஆட்சி பண்றீங்க... ஆட்சியா இது' என கொந்தளித்தார் மணிகண்டன்.
கூட்டத்தில் கலெக்டருக்கு வணக்கம் என்று மணிகண்டன் பேச முற்பட்ட போது, நேரடியாக விஷயத்தை சொல்லுங்கள் என்று கலெக்டர் சொன்னதும், சாப்டூர் விவசாயி செல்வம் (தி.மு.க.,) உடனே கை தட்டி சிரித்தார். இதனால் ஆவேசமான மணிகண்டன் பேசியதாவது:
உங்கள் ஆட்சியில் எல்லாம் ஒழுங்காக நடந்தால் நாங்கள் ஏன் கோரிக்கை வைக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வரவேண்டும். இது உங்கள் (தி.மு.க.,) ஆட்சி தானே. கரைவேட்டி கட்டிய நீங்களே குறைகளை நிவர்த்தி செய்யக் கோரி இங்கு தான் வந்துள்ளீர்கள். அப்படியென்றால் தி.மு.க., ஆட்சி சரியாக நடக்கவில்லையா. எத்தனை குறைதீர் கூட்டம் நடத்தினாலும் எங்கள் பிரச்னைகள் தீரவில்லை. 58 கிராம கால்வாய் கிளையில் உள்ள ஆக்கிரமிப்பு பிரச்னையை சொல்ல வந்தேன். உங்கள் ஆட்சிக்கு கெட்டபெயர் வந்து விடக்கூடாது என்பதற்காக தடுக்கிறீர்களா.
கடந்தமுறை நெல் கொள்முதல் செய்த பின் பணம் கைக்கு வரவில்லை என்று ம.தி.மு.க., விவசாயி மணவாளக்கண்ணன் இக்கூட்டத்தில் எல்லோர் முன்னிலையிலும் அழுதார். கம்யூனிஸ்ட் விவசாயி பழனிசாமி உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை ஆய்வு செய்யும் குழுவில் விவசாயிகளை சேர்க்கச் சொல்வதற்கும் மறுப்பு தெரிவிக்கின்றனர்.
கலெக்டரையும் டி.ஆர்.ஓ.,வையும் அரசு அதிகாரிகளையும் நீங்கள் (கட்சியினர்) பிழிகிறீர்கள். அப்புறம் எங்களுக்கு எப்படி வேலை நடக்கும். மாதந்தோறும் நடக்கும் கூட்டத்திற்கு ஒரு அமைச்சரை வரச்சொல்லுங்கள். அப்போது நிலவரம் தெரியும். இவ்வாறு பேசினார்.
குறுக்கிட்ட கலெக்டர், ''நீங்கள் கட்சி சார்பில் இங்கு பேச வரவில்லை. விவசாயிகளாக வந்துள்ளீர்கள்'' என்றதும் இருதரப்பினரும் அமைதியாகினர்.
அடுத்து பேசிய சாப்டூர் விவசாயி செல்வம் (தி.மு.க.,), ''பேரையூர் தாலுகாவில் தோட்டக்கலை, வேளாண், கால்நடை துறைகளைத் தவிர வேறு எந்த துறை அதிகாரிகளும் தாலுகா விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு வருவதில்லை. உள்ளிருப்பு போராட்டம், வெளிநடப்பு என விவசாயிகள் செய்து விட்டோம். யாருக்கு என்ன அதிகாரம் (பவர்) என்று தெரியவில்லை'' என்றார்.

