/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விழிப்புணர்வு என்னாச்சு: கர்ப்பிணிகள் உட்பட 288 பேருக்கு எச்.ஐ.வி., தொற்று: கவனக்குறைவா, 'பார்த்துக்கலாம்' என்ற அலட்சியமா
/
விழிப்புணர்வு என்னாச்சு: கர்ப்பிணிகள் உட்பட 288 பேருக்கு எச்.ஐ.வி., தொற்று: கவனக்குறைவா, 'பார்த்துக்கலாம்' என்ற அலட்சியமா
விழிப்புணர்வு என்னாச்சு: கர்ப்பிணிகள் உட்பட 288 பேருக்கு எச்.ஐ.வி., தொற்று: கவனக்குறைவா, 'பார்த்துக்கலாம்' என்ற அலட்சியமா
விழிப்புணர்வு என்னாச்சு: கர்ப்பிணிகள் உட்பட 288 பேருக்கு எச்.ஐ.வி., தொற்று: கவனக்குறைவா, 'பார்த்துக்கலாம்' என்ற அலட்சியமா
ADDED : டிச 06, 2024 05:42 AM

மதுரை: மதுரையில் நடந்த பரிசோதனையில் 16 கர்ப்பிணிகள் உட்பட 288 பேருக்கு எச்.ஐ.வி., 'பாசிடிவ்' உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாலியல் நோய் குறித்து விழிப்புணர்வு இல்லையா அல்லது சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என்ற அலட்சியமா என கேள்வி எழுந்துள்ளது.
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சங்கீதா கொடியசைத்து துவங்கி வைத்தார். பின்னர் அரசு மருத்துவக் கல்லுாரியில் நடந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது:
அறியாமல் போதைப்பழக்கத்திற்கு அடிமையான மாணவர்கள் ஒரே ஊசி மூலம் மருந்துகளை பரிமாறிக் கொள்கின்றனர். இதன் மூலமும் எய்ட்ஸ் பரவ வாய்ப்புள்ளது. எய்ட்ஸ் என்றால் எல்லோருக்கும் பயம் இருக்கிறது. போதை ஊசியை பற்றி யாருமே யோசிப்பதில்லை. விழிப்புணர்வும் இல்லை. போதையே மோசமான விஷயம். ஊசி மூலம் பகிர்ந்து கொள்வது அதைவிட ஆபத்தான விஷயம். கூட்டாக மாணவர்கள் நிறைய இடங்களில் இப்படிச் செய்கின்றனர். எய்ட்ஸ் எப்படி வரும் என்பதை தெரிந்து கொண்டு வராமல் தடுப்பது மாணவர்களின் கையில் தான் உள்ளது என்றார்.
மதுரை அரசு மருத்துவமனை ரத்தவங்கி துறைத்தலைவர் சிந்தா பேசியதாவது: எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகப்படும் நபர்கள் பரிசோதனை மையங்களுக்கு செல்லாமல் தயக்கத்தின் காரணமாக ரத்த வங்கி மையங்களை அணுகுகின்றனர். ரத்த வங்கியில் அனைத்து நவீன வசதிகள் இருந்தாலும் 'எய்ட்ஸ்' இருப்பது என்பதை கண்டறிவதற்கான அவகாசம் தேவைப்படும். சிலநேரங்களில் அந்த அவகாசம் கிடைக்காவிட்டால் பரிசோதனை முடிவுகள் தவறாகலாம். எய்ட்ஸ் சந்தேகம் இருந்தால் ரத்தவங்கிக்கு செல்ல வேண்டாம்.
கடந்தாண்டில் எய்ட்ஸ் பாதித்த நோயாளிகள் 145 பேருக்கும் 2004 முதல் தற்போது வரை 417 பேருக்கும் ரத்தக்குழாய், நரம்பியல், இதயம் உள்ளிட்ட துறைகளின் கீழ் அறுவை சிகிச்சை செய்துள்ளோம். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ள மருத்துவ பணியாளர்கள் 46 பேருக்கு எய்ட்ஸ் முன்தடுப்பு வழங்கப்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் 'பாசிடிவ்' ஆக இருந்த 52 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது என்றார்.
மாவட்ட சுகாதார துணை இயக்குநர் குமரகுருபரன் பேசுகையில்,'' மதுரை மாவட்டத்தில் கடந்தாண்டு 46 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு எய்ட்ஸ் பரிசோதனை செய்ததில் 16 பெண்களுக்கும் 22 ஆண்களுக்கும் 'பாசிடிவ்' இருந்தது. பொதுமக்களில் 250 பேருக்கு 'பாசிடிவ்' கண்டறியப்பட்டுள்ளது. தற்போது 0.03 சதவீதத்தில் உள்ளோம். தொற்று இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்'' என்றார்.