ADDED : ஏப் 13, 2026 02:47 AM
மதுரை: தேர்தலை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை, பெங்களூரு, கோவையில் பணிபுரியும் தொழிலாளர்கள், கல்லுாரி மாணவர்கள், ஏப்.23ல் ஓட்டளிக்க ஏதுவாக திருநெல்வேலி, துாத்துக்குடி, செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்களை இயக்க கோரிக்கை எழுந்துள்ளது. வழக்கமான ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாததால் பஸ்களில் அதிக கட்டணம் செலுத்தி பயணிக்கும் நிலையுள்ளது.
நுாறு சதவீத ஓட்டை உறுதி செய்ய சென்னையில் இருந்து திருநெல்வேலி, துாத்துக்குடிக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தமிழ் புத்தாண்டு சிறப்பு ரயில்களை தேர்தல் வரை நீட்டிக்கலாம். ராஜபாளையம், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு இதுவரை கோடை சிறப்பு ரயில் அறிவிக்கப்படாத நிலையில் தேர்தல் சிறப்பு ரயில்களையாவது இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தெற்கு ரயில்வே பயணிகள் சங்க பொதுச்செயலாளர் பத்மநாதன் கூறியதாவது: மதுரை வழியாக எழும்பூர் - கன்னியாகுமரி, கோவை வழியாக சென்னை சென்ட்ரல் - பாலக்காடு, ஓசூர், நாமக்கல் வழியாக மைசூரு - துாத்துக்குடி, செங்கோட்டை, ராஜபாளையம் வழியாக கொல்லம் - திருச்சி இடையே சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்றார்.
