கீழவளவில் நெல் கொள்முதல் நிலையம் எப்போது திறப்பீங்க
கீழவளவில் நெல் கொள்முதல் நிலையம் எப்போது திறப்பீங்க
ADDED : ஜன 27, 2026 06:42 AM

மேலுார்: கீழவளவில் அறுவடை செய்த நெல்லை திறந்த வெளியில் குவித்து வைத்து ஐந்து நாட்களாகியும் கொள்முதல் செய்யாததால் நெல் வீணாகி வருகிறது.
கீழவளவு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு அறுவடை நடக்கிறது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கீழவளவு வீரகாளியம்மன் கோயில் அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கொள்முதல் செய்யும் இடத்தில் கொட்டி வைத்துள்ளனர்.
இந்நிலையத்திற்கு கொங்கம்பட்டி, வடக்கு வலையப்பட்டி , தனியாமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து ஆயிரக் கணக்கான நெல் மூடைகளை கொண்டு வந்து குவித்து வைத்துள்ளனர்.
விவசாயி மலர் கூறியதாவது: ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் செலவு செய்து அறுவடை செய்த நெல்லை திறந்த வெளியில் குவித்து வைத்து ஐந்து நாட்களாக இரவு பகலாக காத்து கிடக்கிறோம். அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். நெல் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் வீணாகிறது.
கடந்த மூன்று நாட்களாக பெய்யும் மழையால் நெல் முளைத்து விட்டது. கொள்முதல் நிலையம் துவங்காதது, இட பற்றாக்குறையினால் வயலில் அறுவடை செய்ய வேண்டிய நெல்லை செய்யாததால் வயலுக்குள் நெல் உதிர ஆரம்பித்துள்ளது. காலம் கடந்து அறுவடை செய்தால் நெல் அரிசி குருணையாக உடையும். மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் தலையிட்டு உடனே கொள்முதல் நிலையம் துவங்க வேண்டும் என்றார்.
