ADDED : நவ 18, 2025 04:16 AM
மதுரை: மதுரை தமுக்கம் சந்திப்பு பகுதியில் இருந்த தியாகிகள் ஸ்துாபி எங்கே என்று தியாகிகள் அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மதுரை போக்குவரத்து நெரிசலை தீர்க்க கோரிப்பாளையம் சந்திப்பில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இப்பாலம் தமுக்கம் சந்திப்பு பகுதியில் துவங்குகிறது. இதனால் இந்த இடத்தில் இருந்த ஸ்துாபியை அகற்ற வேண்டிய கட்டாயம் எழுந்தது.
இந்த ஸ்துாபி 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்ட தியாகிகளின் நினைவாக 1961 ல் காமராஜர் ஆட்சியின் போது நிறுவப்பட்டது. இந்த ஸ்துாபியை அகற்றினால் அதனை காந்தி மியூசியத்தில் வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சமிதி அமைப்பு வலியுறுத்தியது.
அதேசமயம் அதனை அருகில் உள்ள தமுக்கம் மைதானத்தில் நிறுவலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கலெக்டர் தலைமையில் குழு அமைத்து ஸ்துாபியை நிறுவும் இடம் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு, பீம்கள் நிறுவும் பணி துவங்கியபோது ஸ்துாபியை அகற்றினர்.
இதுகுறித்து மேற்கண்ட தியாகிகள் அமைப்பின் செயலாளர் முத்துப்பாண்டி கூறுகையில், ''தமுக்கம் முன்பிருந்த தியாகிகள் ஸ்துாபியை 2 நாட்களுக்கு முன் அகற்றியுள்ளனர். அதை எங்கே வைத்துள்ளனர் எனத் தெரியவில்லை. காந்தி மியூசியத்தில் அமைத்தால் சுதந்திர நாள், ஆக.9 ல் தியாகிகள் தினம், காந்தி ஜெயந்தி உட்பட முக்கிய நாட்களில் ஒரே இடத்தில் இந்த ஸ்துாபிக்கும் மரியாதை செலுத்த இயலும். காந்தி மியூசியத்தில் இடம் தரத்தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்'' என்றார்.

