/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பெண்ணிற்கு விதவை ஓய்வூதியம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
/
பெண்ணிற்கு விதவை ஓய்வூதியம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
பெண்ணிற்கு விதவை ஓய்வூதியம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
பெண்ணிற்கு விதவை ஓய்வூதியம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : நவ 05, 2025 12:43 AM
மதுரை: தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆதரவற்ற விதவை பெண்ணிற்கு ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சிவகிரி அருகே சுப்பையாபுரம் மாரியம்மாள் தாக்கல் செய்த மனு: எனது கணவர் 2011ல் இறந்தார். ஆதரவற்ற விதவைக்கான தமிழக அரசின் நிதி உதவி திட்டத்தின் கீழ் 2012 முதல் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வந்தேன். காரணம் இன்றி 2015 ல் நிறுத்தப்பட்டது. 2015 அக்.,முதல் 2021 நவ.,வரை ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி கலெக்டர், டி.ஆர்.ஓ., சிவகிரி சமூக பாதுகாப்பு திட்ட சிறப்பு தாசில்தாரிடம் விண்ணப்பித்தேன். தாசில்தார் நிராகரித்தார். அதை ரத்து செய்து தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஜெசி ஜீவபிரியா ஆஜரானார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் தமிழகத்தில் வசிக்கவில்லை. ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது 40 என்ற காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் 37 வயதிலிருந்து ஓய்வூதியம் பெற்று வந்தார். அரசாணைப்படி இந்த ஒய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதற்கு மேல். ஏற்கனவே மனுதாரர் தொடர்ந்த வழக்கில்,'மனுதாரர் தமிழகத்தில் வசிக்கவில்லை எனில், அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது,' என இந்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இவ்விஷயத்தை இனி மீண்டும் விசாரிக்க முடியாது.
ஓய்வூதியம் நிறுத்தப்பட்ட அதே 2015 அக்டோபரில் அதிகாரிகளிடம் மனுதாரர் விண்ணப்பித்தார். அதனடிப்படையில், தாசில்தார் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தென்காசி ஆர்.டி.ஓ.,உத்தரவிட்டார். வருவாய்த்துறையின் அறிக்கை மனுதாரருக்கு எதிரானதாக இருந்தாலும், அது எந்த உண்மை அடிப்படையிலும் வழங்கவில்லை. மனுதாரர் கேரளாவிற்கு கூலி வேலைக்கு சென்றதாக வெறும் குற்றச்சாட்டு மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளது. உதவி கோரும்போது, தகுதியின் அளவுகோல்களை பூர்த்தி செய்கிறார் என்பதை விண்ணப்பதாரர் நிரூபிக்க கடமைப்பட்டுள்ளார். அந்த பொறுப்பு விண்ணப்பதாரரின் மீது இருக்கும். மாத ஓய்வூதியம் நிறுத்தப்படும்போது, அப்பொறுப்பு அதிகாரியின் மீது விழும். சரியான காரணங்களுக்காகவே நிறுத்தப்பட்டது என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.
அப்பொறுப்பை அவர்கள் எந்த வகையிலும் நிறைவேற்றவில்லை. மனுதாரருக்கு ஓய்வூதியம் வழங்கியது உண்மை. நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

