மதுரை மாநகராட்சி பிரச்னைகளை தீர்ப்பதில் 'கறார்' காட்டுவாரா கவுரவ்: 'பவர் சென்டர்'களுக்கு வைப்பாரா முற்றுப்புள்ளி
மதுரை மாநகராட்சி பிரச்னைகளை தீர்ப்பதில் 'கறார்' காட்டுவாரா கவுரவ்: 'பவர் சென்டர்'களுக்கு வைப்பாரா முற்றுப்புள்ளி
UPDATED : ஜூன் 04, 2026 10:43 AM
ADDED : ஜூன் 04, 2026 06:45 AM

மதுரை: மதுரை மாநகராட்சியில் குப்பை முதல் குடிநீர் வரை மக்களை பாதிக்கும் பிரச்னைகளை தீர்க்க கறார் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாகத்தை முடக்கும் 'பவர் சென்டர்'களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாநகராட்சி கமிஷனராக இருந்த சித்ரா, சென்னை மாநகராட்சி துணை கமிஷனராக மாற்றப்பட்டார். அவருக்குப் பதில் சென்னை குடிநீர் வடிகால் வாரிய செயல் இயக்குநர் கவுரவ் குமார் 34, மதுரை மாநகராட்சியின் 72வது கமிஷனராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.
மாநகராட்சியில் மேயர், மண்டலத் தலைவர்கள் பதவிகள் காலியாக உள்ளன. அமைச்சர்கள் 'ஆதிக்கம்' இல்லை. த.வெ.க., ஆட்சியின் முதல் கமிஷனராக பொறுப்பேற்றுள்ள கமிஷனரின் கவனம் செலுத்துவதற்கான பிரச்னைகள் ஏராளமாக உள்ளன. அவற்றின் விவரம்:
* குப்பை பிரச்னையில் தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இதில் தனியார் மயம் வேண்டாம், நிரந்தர துாய்மைப் பணியாளர்கள் மூலம் மாநகராட்சியே குப்பை அகற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற குரல் வலுப்பெற்றுள்ளது. குப்பை மேலாண்மையை கண்காணிக்க குழுக்கள் ஏற்படுத்தலாம். இதனை கமிஷனர் ஆலோசிக்க வேண்டும்.
* முக்கியமான பொறியியல் பிரிவில் பல குளறுபடிகள் உள்ளன. பி.இ., முடித்த ரெகுலர் உதவிப் பொறியாளர்கள் 'டம்மி' ஆக்கப்பட்டுள்ளது, பி.இ., தகுதியில்லாத தேர்ச்சித் திறன் 2 நிலை அலுவலர்களுக்கு முக்கியத்துவம், அதன் பின்னணியில் 'வசூல் பேர ஒப்பந்தம்' என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.
* ரோடு, கட்டட பணிகளை மேற்கொள்ளும் ஏ.இ.,க்கள் 'எம்' புக் பராமரிக்க வேண்டும். ஆனால் ஒப்பந்ததாரர், சி.இ., அலுவலகத்தில் உள்ளோர் ஆதிக்கத்தால் மாற்று ஏ.இ.,க்களை வைத்து 'எம்' புக் அறிக்கை அளித்து நிதி ஒதுக்கீடு செய் வதாக புகார் எழுகிறது. எனவே ரேண்டமாக 'எம்' புக் பராமரிப்பு பணிகளை கமிஷனர் ஆய்வு செய்ய வேண்டும்.
* சி.இ., நேர்முக உதவியாளர் பணியிடம் உதவி செயற்பொறியாளருக்கானது. அதில் கடந்த 5 கமிஷனர்களின் காலங்களில் தேர்ச்சி திறன் நிலை 2 அலுவலரே நேர்முக உதவியாளராக நீடித்து 'பவர் சென்டராக' வலம் வருகிறார்.
* இதுபோல் கமிஷனர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளர் ஒருவர் 'பவர் சென்ட்ராக' வலம் வருகிறார்.இவர் அனுமதியின்றி யாரும் கமிஷனரை சந்திக்க முடியாது. கமிஷனரின் 'டபேதார்' முதல் அனைத்து பிரிவுகளிலும் இவரது 'விசுவாசி' அலுவலர்களே கோலோச்சுகின்றனர். கண்காணிப்பாளர் 'கேடர்' என்றாலும் செயற்பொறியாளர், துறை தலைமை அலுவலர்கள் இவரது கட்டுப்பாட்டில் உள்ளதால் கமிஷனருக்கு இணையாக வலம் வருகிறார். இதுபோன்ற 'பவர் சென்டர்'களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
* குடிநீர் பிரச்னையை தீர்க்க தற்போதுள்ள குடிநீர் திட்டங்களை ஒருங்கிணைத்து (இன்டர்லிங்க்கிங்) வினியோகம் செய்யும் முறையை சாத்தியப்படுத்த வேண்டும். அதன்மூலம் வைகை குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டால், முல்லை பெரியாறு திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யலாம்.
* வார்டுகளில் கழிவு நீர் தேங்க காரணம் பம்பிங் ஸ்டேஷன்கள் சரியாக பராமரிக்கப்படாததே. மாற்று மோட்டார்கள் இல்லாததால், 60 சதவீதம் எம்.எல்.டி., கழிவு நீர் வார்டுகளுக்குள் தேங்குவதாக சர்ச்சை உள்ளது.
* நகரமைப்பு பிரிவில் ஏராளமான விதிமீறல்கள். த.வெ.க., எம்.எல்.ஏ., கார்த்தியேன்கூட மாநகராட்சி கூட்டத்தில் பல குற்றச்சாட்டுக்களை கூறினார்.
* நகரில் நாய்கள், மாடுகள் தொல்லை உள்ளது. ரோடுகளில் கூட்டமாக திரிவதால் பயணிகள், டூவீலர்களில் செல்வோர் பாதிக்கின்றனர். வரிவசூலை அதிகரிக்க முந்தைய கமிஷனர் சித்ரா போல் சிறப்பு முகாம் நடத்த வேண்டும். பிரச்னைகளுடன் வருவோர் எளிதாக சந்திக்கும் வகையில் 'மக்கள் கமிஷனராக' செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பு உள்ளது.
