/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மழையால் தாமதமாகுமா செயற்கை 'தடகள' பணி
/
மழையால் தாமதமாகுமா செயற்கை 'தடகள' பணி
ADDED : ஜன 21, 2025 05:57 AM
மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ரூ.8.24 கோடியில் அமைக்கப்பட்டு வரும் 400 மீட்டர் செயற்கை தடகள போட்டிகளுக்கான 'டிராக்' அமைக்கும் பணிகள் மழையால் அவ்வப்போது தடைபடுவதால் மார்ச்சுக்குள் முடியுமா என வீரர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
2006 ல் ரூ.3 கோடியில் அமைக்கப்பட்ட செயற்கை ரப்பர் துகள்களால் ஆன 400 மீட்டர் டிராக்கை மீண்டும் சீரமைக்க ரூ.8.24 கோடியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 2024 ல் வழங்கியது. 2025 மார்ச் வரை ஓராண்டுக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஏற்கனவே பொருத்தப்பட்டு சேதமடைந்திருந்த செயற்கை ரப்பர் துகள்களை அகற்றுவதற்கே பல மாதங்களான நிலையில் சமீபத்தில் தான் டிராக்கில் தார் ரோடு அமைக்கப்பட்டது. ரோடு சீராவதற்கு 21 நாட்கள் ஆகும் என்ற நிலையில் அவ்வப்போது மழை பெய்து தார் ரோட்டை ஈரமாக்கி வருகிறது. நல்ல வெயிலில் மட்டுமே தார் ரோடு 'செட்' ஆகும். அதன் பின் மூன்றடுக்குகளாக 3 மி.மீ., அளவில் ரப்பர் துகள்கள் பொருத்தப்பட வேண்டும்.
இதற்கு பின் டிராக்கின் உட்பகுதியில் இயற்கை புல்தரை கால்பந்து அரங்கு அமைக்க வேண்டும். இதற்கு ஒரு மாதமாகும். தற்போது ஜன. 20 ஐ கடந்தும் ரப்பர் துகள்கள் பொருத்தும் பணி துவங்காததால் விளையாட்டு விடுதியில் பயிற்சி பெறும் வீரர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஓராண்டாக 400 மீட்டர் டிராக்கில் பயிற்சி பெற முடியாத நிலையில் திட்டமிட்ட நேரத்திற்குள் செயற்கை 'தடகளம்', இயற்கை புல்தரை கால்பந்து அரங்கை அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் வீரர்கள்.

