/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதல்வர் பார்வைபட்ட பந்தல்குடி கால்வாய் மாநகராட்சி - நீர்வளத்துறை பஞ்சாயத்துக்கு கிடைக்குமா தீர்வு
/
முதல்வர் பார்வைபட்ட பந்தல்குடி கால்வாய் மாநகராட்சி - நீர்வளத்துறை பஞ்சாயத்துக்கு கிடைக்குமா தீர்வு
முதல்வர் பார்வைபட்ட பந்தல்குடி கால்வாய் மாநகராட்சி - நீர்வளத்துறை பஞ்சாயத்துக்கு கிடைக்குமா தீர்வு
முதல்வர் பார்வைபட்ட பந்தல்குடி கால்வாய் மாநகராட்சி - நீர்வளத்துறை பஞ்சாயத்துக்கு கிடைக்குமா தீர்வு
ADDED : ஜூன் 04, 2025 01:26 AM
மதுரை: மதுரையில் முதல்வர் ஸ்டாலின் வருகையின்போது துணியால் மூடி சர்ச்சையை ஏற்படுத்திய பந்தல்குடி கால்வாய் விஷயத்தில், நீர்வளத்துறை - மாநகராட்சியின் புரிதல் இல்லாத ஒப்பந்தமே காரணம் என தெரியவந்துள்ளது. இதேநிலையில் தான் 16 மழைநீர் கால்வாய்களும் உள்ளன.
மாநகராட்சியின் 100 வார்டுகளுக்குள் 16 மழைநீர் கால்வாய்கள் உள்ளன. நீர்வளத்துறைக்குட்பட்ட இக்கால்வாய்களின் நீளம் 44.23 கி.மீ., 50 ஆண்டுகளுக்கு முன் இவை பாசன கால்வாய்களாக இருந்தன. மழைநீர் கால்வாய்கள் காலப்போக்கில் கழிவுநீர் தேங்கும் கால்வாய்களாக மாறிவிட்டன.
இதன் காரணமாக இக்கால்வாய்களை பராமரிக்கும் பணியை நீர்வளத்துறை கைவிட்டது. இதனால் மழைக் காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளுக்குள் புகுந்து சர்ச்சையாகின்றன. அப்போது கால்வாய்களை பராமரிக்கவில்லை என மாநகராட்சி மீது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். ஆனால் இதன் பெரும் பங்கு நீர்வளத்துறைக்கு உள்ளது. அது வெளியே தெரியவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் ஆதங்கப்படுகின்றனர்.
அவர்கள் கூறியதாவது: நகரின் 16 மழைநீர் கால்வாய்களும் நீர்வளத்துறைக்கே சொந்தமானவை. மக்கள் நலன் கருதி 2008ல் ரூ.200 கோடி சிறப்பு நிதி பெற்று மழைநீர் கால்வாய்களை மாநகராட்சி துார்வாரியது. சிமென்ட் தளம் அமைத்தது. அதற்காக நீர்வளத்துறையிடம் தடையில்லா சான்றும் பெற்றது.
முந்தைய கமிஷனர் தினேஷ்குமார் 'இக்கால்வாய்களை ஒப்படைத்தால் மாநகராட்சியே பராமரிக்கும். சிறப்பு அனுமதி வழங்குமாறு' நீர்வளத்துறைக்கு கடிதம் எழுதினார். ஆனால் அத்துறை ஒப்படைக்க முன்வரவில்லை. பராமரிக்கவும் மறுக்கிறது. ஆனாலும் மக்கள் நலன் கருதி கால்வாய்களில் தேங்கிய குப்பையை மாநகராட்சி அகற்றுகிறது. ஆனால் துார்வாரவில்லை என மாநகராட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. பந்தல்குடி கால்வாய் பிரச்னை போல் ஏதாவது ஏற்பட்டால்தான் 'கால்வாய் எங்களுடையது தான். ஆனால் பராமரிப்பது மாகராட்சி' என கூறி அத்துறை அதிகாரிகள் 'எஸ்கேப்' ஆகிவிடுகின்றனர். இதனால் தான் பராமரிப்பில் 'பஞ்சாயத்து' ஏற்படுகிறது என்றனர்.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், பாசனத்திற்கு பயன்படும் கால்வாய்களை தான் நீர்வளத்துறை பராமரிக்கும். மாநகராட்சிக்குள் உள்ளவை பாசனக் கால்வாய்கள் இல்லை. கழிவுநீரை கலக்க விடுகின்றனர். குப்பை கொட்டப்படுகின்றன. அதை பராமரிக்க வேண்டியது மாநகராட்சியே. பாசனக் கால்வாய்களாக இல்லாததால் அதை பராமரிக்க எங்களுக்கு நிதிஒதுக்கீடு இல்லை என்றனர்.