/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அமைச்சர் அறிவித்தபடி அடுத்தாண்டு டிசம்பருக்குள் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிேஷகம் நடக்குமா? முந்தைய நடைமுறைகள் சொல்வது என்ன
/
அமைச்சர் அறிவித்தபடி அடுத்தாண்டு டிசம்பருக்குள் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிேஷகம் நடக்குமா? முந்தைய நடைமுறைகள் சொல்வது என்ன
அமைச்சர் அறிவித்தபடி அடுத்தாண்டு டிசம்பருக்குள் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிேஷகம் நடக்குமா? முந்தைய நடைமுறைகள் சொல்வது என்ன
அமைச்சர் அறிவித்தபடி அடுத்தாண்டு டிசம்பருக்குள் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிேஷகம் நடக்குமா? முந்தைய நடைமுறைகள் சொல்வது என்ன
UPDATED : டிச 12, 2024 09:21 AM
ADDED : டிச 12, 2024 08:03 AM

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருப்பணிகள் நடந்து வரும் நிலையில் ஆகமவிதிகளை பின்பற்றி பஞ்சாங்கம் பார்த்த பிறகே குறிப்பிட்ட தேதியில் கும்பாபிேஷகம் நடத்தப்படும் என்பதால், அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவித்தபடி அடுத்தாண்டு டிசம்பருக்குள் நடத்துவது சாத்தியமா என கேள்வி எழுந்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிேஷகம் 2009 ஏப்ரல் 8 ல் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிேஷகம் நடத்தப்படுவது ஐதீகம். ஆனால் 2018 பிப்ரவரி 2ல் கோயிலின் வீரவசந்தராயர் மண்டபம் தீ விபத்தில் சிதிலமடைந்தது. இதனால் 2021ல் கும்பாபிேஷகம் நடத்துவதில் தடை ஏற்பட்டது.
வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைத்த பிறகே கும்பாபிேஷகம் நடத்தப்பட வேண்டும் என்பதால் ஒருபுறம் சீரமைப்பு பணியும், மறுபுறம் திருப்பணிகளும் நடந்து வருகின்றன. 2026 மார்ச்சில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான நன்னடத்தை விதிகள் அமலாகிவிடும் என்பதால் அதற்கு முன்னதாக கும்பாபிேஷகத்தை நடத்த தி.மு.க., அரசு ஆர்வம் காட்டி வருகிறது. 2026 ஜனவரியில் கும்பாபிேஷகம் நடக்கும் வகையில் திருப்பணிகளை அறநிலையத்துறை வேகப்படுத்தியது.
இந்நிலையில் சட்டசபையில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பிற்கு 25 அடி நீளம் கொண்ட கற்துாண்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெண்டர் கோரப்பட்டுள்ளது. கோயிலில் 63 பணிகளில் 40 பணிகள் உபயதாரர்கள் மூலம் நடந்து வருகிறது. எஞ்சிய 23 பணிகள் முடிக்கப்பட்டு அடுத்தாண்டு டிசம்பருக்குள் கும்பாபிேஷகம் நடத்தப்படும் என அறிவித்தார்.
இக்கோயில் கும்பாபிேஷகம் 2009ம் ஆண்டை தவிர முந்தைய ஆண்டுகளில் ஆனி மாதமே நடத்தப்பட்டு வந்துள்ளது. கோயில் திருவிழா பாதிக்கக்கூடாது என்பதை கருத்திற்கொண்டே ஆனியில் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தி.மு.க., ஆட்சியின்போது 2009 ஏப்ரல் 8 ல் கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. ஐ தீகத்தை மீறியதால்தான் அடுத்த 12 ஆண்டுகளில் கும்பாபிேஷகம் நடக்கவில்லை. இன்னும் நாட்கள் இழுத்துக்கொண்டே செல்கிறது என்கின்றனர் பக்தர்கள்.
அவர்கள் கூறியதாவது:
வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணிகள் மெதுவாக நடந்து கொண்டிருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் பணி முடிய 2 ஆண்டுகளுக்கு மேலாகும்.
இப்பணி முடிந்தால்தான் கும்பாபிேஷகம் நடத்த முடியும். ஒருவேளை 'ஜெட்' வேகத்தில் பணிகள் நடக்கும்பட்சத்தில் பஞ்சாங்கத்தில் நாள், நட்சத்திரம் பார்த்துதான் பட்டர்கள் கும்பாபிேஷகம் தேதியை முடிவு செய்வார்கள்.
இதனால் அடுத்தாண்டு டிசம்பருக்குள் கும்பாபிேஷகம் நடக்க சாத்தியமே இல்லை. 2026ல் வேண்டுமானால் நடக்க வாய்ப்புண்டு. அதுவும் பஞ்சாங்கத்தின் அடிப்படையிலேயே முடிவு செய்வார்கள் என்றனர்.