
l எதிர்பார்ப்பில் மானாவாரி விவசாயிகள் l வைகை தண்ணீருக்கு திட்டம் வேண்டும்
திருப்பரங்குன்றம் வட்டாரம் தென்பழஞ்சி, சாக்கிலிப்பட்டி, வேடர் புளியங்குளம், வடபழஞ்சி, கரடிப்பட்டி உள்பட பத்துக்கும் மேற்பட்ட மானாவாரி கண்மாய்கள் உள்ளன. மழையை மட்டுமே இவை நம்பியுள்ளன. இக்கண்மாயை நம்பி 2000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஐந்து ஆண்டுகளாக போதுமான மழை இன்றி இவை வறண்டு கிடக்கின்றன.
ஐந்தாண்டு வறட்சி விவசாயிகள் சிவராமன், பாண்டி கூறியதாவது: பருவமழை துவங்கிய நிலையில், மானாவாரி பகுதியில் லேசான துாறலுடன் நின்று விடுகிறது. கண்மாய்கள் வறண்டுள்ள நிலையில் கிணறுகள், ஆழ்குழாய்களில் தண்ணீர் இருப்போர் மட்டும் விவசாயம் செய்கின்றனர்.
2020க்கு பின்பு மானாவாரி கண்மாய்கள் வறண்டதால், பலர் நிலங்களை தரிசாக போட்டு விட்டனர். பல விவசாயிகள் கட்டுமானம், ஆடு, மாடு வளர்ப்பு என மாறிவிட்டனர். இது தொடர்ந்தால் விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகும்.
வைகை அணையில் இருந்து திருமங்கலம் விஸ்தரிப்பு கால்வாயில் தண்ணீர் திறக்கும்போது மாவிலிபட்டி, கிண்ணி மங்கலம் கண்மாய்களுக்கு தண்ணீர் வருகிறது. அக்கண்மாய்களில் மறுகால் பாய்ந்தால்தான் தென்பழஞ்சி கண்மாய்க்கு தண்ணீர் வரும்.
இரண்டு கண்மாய்களின் மறுகால் பகுதியில் இருந்தும் தென்பழஞ்சி கண்மாய் வரை 500 மீட்டருக்கு கால்வாய் உள்ளது. அக்கால்வாய் புதர் மண்டி கிடக்கிறது. இதனை சீரமைத்தால் தென்பழஞ்சி கண்மாய்க்கும், அங்கிருந்து மற்ற மானாவாரி கண்மாய்களுக்கும் தண்ணீர் வழங்க முடியும்.
வைகை தண்ணீர் வேண்டும் வைகை அணை தண்ணீரை கொண்டு வர 40 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறோம். தென்பழஞ்சி கண்மாய்க்கு தனிக் கால்வாய் அமைக்க ஓராண்டுக்கு முன் திட்ட மதிப்பீடுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியது. அளவீடு செய்து, மண் மாதிரியும் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. அதன் பின்பு எந்த நடவடிக்கையும் இல்லை.
இத்திட்டம் நிறைவேறினால்தான் மானாவாரி கண்மாய் விவசாயிகள் வாழ்க்கை மேம்படும். இந்தாண்டு போதிய மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் ஏராளமான விவசாயிகள் நாற்று பாவி உள்ளனர். பத்து நாட்களில் மழை பெய்யவில்லை என்றால் நாற்றுக்கள் முற்றி வீணாகிவிடும் என்றனர்.