ADDED : ஜன 21, 2026 06:28 AM

மேலுார்: ஒரு மாதமாக டவுன் பஸ்சை நிறுத்தி விட்டதால் மதுரை உட்பட வெளியூர் செல்வதற்கு சிரமப்படுவதாக, கிடாரிப்பட்டி பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
இக் கிராமத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து கிடாரிப்பட்டிக்கு அரசு டவுன்பஸ் தினமும் 6 முறை வந்தது. மதுரை செல்லும் மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உட்பட கிராமத்தினருக்கு இந்த பஸ் பேருதவியாக இருந்தது. இந்த பஸ் பழுதானதால் கடந்த 30 நாட்களாக நிறுத்திவிட்டனர்.
அவ்வூரைச் சேர்ந்த அழகுராஜா கூறியதாவது: ஒருமாதத்திற்கும் மேலாக பஸ்வராததால், அழகர் கோவில், மாங்குளம் பகுதிகளுக்கு ஒரு பஸ்சும், பெரியார் பஸ் ஸ்டாண்டுக்கு மற்றொரு பஸ்சிலும் மாறி, மாறிச் செல்ல வேண்டியுள்ளதால், நேரம், பணம் விரயமாகிறது.
பணிகள் முடிந்து சொந்த ஊருக்கு திரும்ப இரவு 8:00 மணி கடைசி பஸ்சுக்கு பெரியார் பஸ் ஸ்டாண்ட் சென்றால் இரவு 7:00 மணிக்கே புறப்பட்டு சென்றுவிடுகிறது. பஸ் பழுதானது குறித்து பொன்மேனி பஸ் டெப்போ மேலாளரிடம் மனு கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை. அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதால், மாவட்ட நிர்வாகம் விடியல் பயண பஸ்சை மீண்டும் கிராமத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
