ADDED : ஆக 15, 2026 05:33 AM

சோழவந்தான்: திருவேடகத்தில் பராமரிப்பின்றி பாழடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
இங்கு வைகையாற்றுப் படித்துறை அருகே பல ஆண்டுகளுக்கு முன் உடைகற்களால் கட்டிய மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. பயன்பாடின்றி தற்போது கைவிடப்பட்டதால், பராமரிப்பின்றி பாழடைந்துள்ளது.
தொட்டியின் கீழ் உள்ள அறையில் 5 அடிக்கும் மேலான பெரிய பள்ளம் உள்ளது. மது அருந்தவும், சமூகவிரோதிகளின் கூடாரமாகவும் மாறிவிட்டது. இந்த அறை முழுதும் பிளாஸ்டிக் கப்புகள், பாட்டில்கள் நிறைந்து கிடக்கின்றன. கட்டடத்தின் பல பகுதிகள் சேதமடைந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றன. செடி, கொடிகள் முளைத்து சுவரில் விரிசல் விழுந்துள்ளன.
'சன்ஷேடு'கள்' காரை பெயர்ந்து எப்போது விழுமோ என்ற நிலையில் உள்ளது. அருகே வைகையாற்று படித்துறையில் முன்னோருக்கான கர்மகிரியைகள், தர்ப்பணங்கள் நடக்கும்.
ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
