/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு மருத்துவமனையில் கட்டண வார்டு வருமா
/
அரசு மருத்துவமனையில் கட்டண வார்டு வருமா
ADDED : அக் 01, 2024 05:12 AM
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் சில ஆண்டுகளுக்கு முன் வரை கட்டண வார்டு செயல்பட்ட நிலையில் வார்டுகள் மாற்றத்தால் இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இங்கு அறுவை சிகிச்சை முதல் மருந்துகள், படுக்கை வசதி வரை அனைத்தும் இலவசம் என்றாலும் இன்சூரன்ஸ் கட்டணத்தில் தனியறையில் தங்க விரும்பும் நோயாளிகளுக்கு 16 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அறுவை சிகிச்சைக்கு பின் பொது வார்டில் பொது கழிப்பறையை பயன்படுத்த விரும்பாதவர்கள் தனியறையில் கட்டண அடிப்படையில் சிகிச்சை பெற்றனர்.
அரசுத்துறையைச் சேர்ந்தவர்கள் இதை அதிகம் பயன்படுத்தியதால் அறைகளில் எந்நேரமும் நோயாளிகள் தங்கி வந்தனர். இங்கிருந்த சில துறைகள் அரசு மருத்துவக் கல்லுாரி அருகே பல்நோக்கு மருத்துவமனைக்கும், எதிரிலுள்ள தீவிர விபத்து பிரிவு மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டன. அதன்பின் கட்டண வார்டுகள் இங்கு செயல்படவில்லை.
ஆனால் தீவிர விபத்து மற்றும் பல்நோக்கு மருத்துவமனைகளில் தலா 4 பெரிய, 4 சிறிய கட்டண அறைகள் தற்போது வரை செயல்படுகின்றன. இதன் மூலம் மருத்துவமனைக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது.
பழைய மகப்பேறு வார்டு முதல் மாடியில் 8 பெரிய அறைகள் கழிப்பறை வசதியுடன் செயல்படாமல் பூட்டப்பட்டுள்ளன. அவ்வப்போது மருத்துவ மாணவிகள், பணியாளர்கள் உடல்நலமில்லாத போது தங்கிச் செல்கின்றனர். இந்த வார்டை புதுப்பித்து 8 அறைகளை 16 கழிப்பறையுடன் தனியறைகளாக்கி தனி கழிப்பறைகள் உருவாக்கினால் மருத்துவமனைக்கு வருவாய் கூடும்.