ADDED : மார் 17, 2025 05:21 AM
மதுரை : மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ரயில்வே போலீசார் சார்பில் நடந்தது.
சமீபத்தில் காட்பாடி அருகே ரயிலில் தனியாக சென்ற கர்ப்பிணி தாக்கப்பட்டதை அடுத்து ரயில்வே போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மதுரையில் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பெண் பயணிகளிடம் 'காவலன் எஸ்.ஓ.எஸ்.,' செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்துகின்றனர்.
ரயில்வே போலீசார் கூறியதாவது: தினமும் 50 பெண்கள் இச்செயலியை பதிவிறக்கம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்செயலியில் 2 அலைபேசி எண்களை பதிவு செய்ய வேண்டும். ஆபத்து அல்லது உதவி தேவைப்படுகையில் அலைபேசியை 'ஷேக்' செய்தாலே போதும். பதிவு செய்த அலைபேசி எண்களுக்கும், கண்காணிப்பு அறைக்கும் தகவல் சென்றுவிடும். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உதவுவர்.
ரயில்களில் மகளிர் பெட்டியில் ஆண்கள் பயணிப்பதை தடுக்க போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மகளிர் பெட்டியில் தனியாக பயணிக்கும் பெண்கள் பொதுப் பெட்டிக்கு மாற அறிவுறுத்தப்படுகின்றனர். முக்கிய ரயில்களில் பெண்கள் பாதுகாப்புக்கு மகளிர் போலீசாரும் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்'' என்றனர்.
ரயில்வே உதவிக்கு 139, ரயில்வே போலீசார் உதவிக்கு 1512, குழந்தைகள் சம்பந்தமாக 1098, பெண்கள் சம்பந்தமாக 181, 1091ல் புகார் தெரிவிக்கலாம்.