ADDED : ஏப் 03, 2026 05:55 PM

மதுரை: மதுரையில் பெத்தானியாபுரம், அண்ணாநகர் பகுதிகளில் கட்டுமானத் தொழிலாளர்களின் வசதிக்காக உழைப்பாளர் நலக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழக தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டுமான தொழிலாளர் நலவாரியம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் மாநில அளவில் 50 இடங்களில் உழைப்பாளர் நலக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரையில் பெத்தானியாபுரத்தில் ரூ.34 லட்சம் செலவில் 35 அடிக்கு 10 அடி என்ற அளவில் ஒரு கூடம் செயல்பட்டு வருகிறது. மற்றொன்று அண்ணாநகரில் அமைக்கப்பட்டு வருகிறது.
மதுரையில் நரிமேடு, ஜெய்ஹிந்த்புரம், அண்ணாநகர், கே.புதுார், பெத்தானியாபுரம் பகுதியில் தினமும் கட்டுமான பணிகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் ஒன்றுகூடுவர். அங்கிருந்து கட்டுமான பணிகளுக்கு தொழிலாளர் தேவைப்படுவோர் அவர்களை அழைத்துச் செல்வர். இதற்காக ரோட்டோரம் நீண்டநேரம் கால்கடுக்க நின்று கொண்டிருப்பர்.
அவர்களை ஒழுங்கு படுத்தி, அமரும் வகையில் அரசு சார்பில் சில மாதங்களுக்கு முன் கூடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை கன்டெய்னர் பெட்டி தோற்றத்தில் கண்ணாடி முகப்புடன் உருவாக்கி உள்ளனர். அதில் டேபிள் சேர், பேன், அமர்வதற்கு பெஞ்ச், குடிநீர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சறுக்குப்பாதை வசதியும் உள்ளது. இதனை தொழிலாளர் நலத்துறை ஊழியர் ஒருவர் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை திறந்து வைத்திருப்பார். அவரிடம் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்வது, அதைப் பற்றிய விவரங்களை பெறலாம் எனவும் அதிகாரிகள் கூறினர்.
