/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றில் தீபமேற்ற கோரி அறுபடை வீடுகளில் வழிபாடு
/
குன்றில் தீபமேற்ற கோரி அறுபடை வீடுகளில் வழிபாடு
ADDED : ஜன 01, 2026 06:02 AM
திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, அறுபடை வீடுகளுக்கு பாதயாத்திரை செல்லும் கள்ளக்குறிச்சி முருக பக்தர்கள் நேற்று முன்தினம் திருப்பரங்குன்றம் வந்தனர்.
உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய கோவில் சார்பில், மலை மீது உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக ஹிந்து அமைப்பினர், முருக பக்தர்கள் அறப்போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன், கோவை, ஈரோடு, பொள்ளாச்சி உள்ளிட்ட பல மாவட்ட பக்தர்கள் மாலை அணிந்து திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தனர். அவர்கள் தரிசனம் முடித்து, கோவில் வாசல் முன் மேளதாளங்களை முழங்கி, பஜனை பாடி ஆடினர்.
பின், மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் முருகனுக்கு தீபம் ஏற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இந்நிலையில், நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருக பக்தர்கள் வேல், பால் குடம், காவடியுடன் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்தனர்.
அவர்கள் கூறியதாவது:
தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும். முருக பக்தர்களின் பல நுாறு ஆண்டு கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். நாடு செழித்து, உலகில் தீப ஒளி பரவ வேண்டும். மலையில் முருகப் பெருமானுக்கு தீபம் ஏற்றுவது முருக பக்தர்களின் உரிமை, கடமை. எங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வேண்டும் என, முருகனின் அறுபடை வீடுகளுக்கும் பாதயாத்திரை செல்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

