/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
யார் ஹிந்து: வி.எச்.பி., தாணுமாலையன் விளக்கம்
/
யார் ஹிந்து: வி.எச்.பி., தாணுமாலையன் விளக்கம்
ADDED : செப் 22, 2024 07:43 AM

மதுரை : 'ரிஷிகள், ஞானிகள், அறிஞர்கள் வழிகாட்டுதல்களை யார் ஏற்றுக்கொண்டு தங்கள் வாழ்வில் பின்பற்றி நடக்கிறாரோ, உலகில் எங்கு இருந்தாலும் அவரே ஹிந்து,'' என வி.எச்.பி., சர்வதேச இணை பொதுச் செயலாளர் தாணுமாலையன் பேசினார்.
மதுரை அருகே பரவையில் விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.,) சார்பில் உலக ஹிந்து கல்வியாளர்கள் சங்கத்தின் இரண்டு நாள் மாநில மாநாடு நடந்தது. நேற்று நடந்த அமர்வில் தாணுமாலையன் பேசியதாவது:
என்ன கல்வி கற்றாலும் நம்முடைய குடும்பம், நாட்டின் வரலாற்றை தெரிந்து கொள்வது அவசியம். 1947ல் இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது தான் உலகிலேயே மிகப் பெரிய இடம்பெயர்வும், படுகொலைச் சம்பவங்களும் நடந்தன. ஹிந்து தர்மம், தத்துவங்கள் அழிக்கப்பட்டு மதமாற்றம் நடைபெறுமானால் அப்போது பிரிவினை ஏற்படும்.
சுவாமி சின்மயானந்தா எழுதிய உலக ஹிந்து கவுன்சில் என்ற கட்டுரையில் ஹிந்துக்களுக்கு உலகளவிலான அமைப்பு தேவை என குறிப்பிட்டார். 1955ல் மத்திய பிரதேசத்தில் ஹிந்துக்களை மதம் மாற்றும் முயற்சி நடந்தது.
இதனால் மலைவாழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 1956ல் நியோகி கமிஷன் பரிந்துரைகளின் படி அன்றைய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் ரவி ஷங்கர் சுக்லா மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வந்தார். இத்தகைய சட்டத்தை அன்றே கொண்டு வந்தது காங்கிரஸ்.
தற்போதைய காலகட்டத்தில் 'யார் ஹிந்து' என்ற கேள்வி எழுகிறது. பாரத நாட்டின் ரிஷிகள், ஞானிகள், அறிஞர்கள் வழிகாட்டுதல்களை யார் ஏற்றுக்கொண்டு தங்கள் வாழ்வில் பின்பற்றி நடக்கிறாரோ உலகில் எங்கு இருந்தாலும் அவரே ஹிந்து.
ஹிந்து தர்மத்தை கடைபிடிப்பது, பாதுகாப்பது, பிரசாரம் மேற்கொண்டு மக்களிடம் சேர்ப்பதே வி.எச்.பி.,யின் முக்கிய கொள்கை.
இவ்வாறு பேசினார்.
உலக ஹிந்து கல்வியாளர்கள் சங்கத்தில் பல்வேறு பல்கலைகள், கல்லுாரிகளை இணைப்பது, தென் தமிழகத்தில் உள்ள கோயில் பிரச்னைகள் குறிப்பாக ஸ்தல புராணத்தை மீட்கும் செயல் திட்டங்கள் குறித்து கல்வியாளர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.
வி.எச்.பி., தக் ஷிண தமிழ்நாடு மாநில செயலாளர் லட்சுமண நாராயண ராமசாமி நன்றி கூறினார். காந்தி கிராம பல்கலை அறிவியல் துறை டீன் சேதுராமன், பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீநிவாசன், வி.எச்.பி., நிர்வாகி வேணுகோபால், கல்வியாளர்கள் பலர் பங்கேற்றனர்.