/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நம்ம ஊரு திருவிழா விண்ணப்பிக்கலாம்
/
நம்ம ஊரு திருவிழா விண்ணப்பிக்கலாம்
ADDED : மார் 20, 2025 05:44 AM
மதுரை: அரசு கலைப் பண்பாட்டுத்துறை சார்பில் பொங்கல் விழாவின் போது சென்னையில் 'சங்கமம்' நிகழ்ச்சி நடைபெறும். முன்னதாக மதுரை உள்ளிட்ட நகரங்களில் 'நம்ம ஊரு திருவிழா' நடத்தப்பட உள்ளது.
இதில் பங்கேற்கும் குழுக்களை தேர்வு செய்ய மார்ச் 22, 23 ல் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை கலைநிகழ்ச்சி பதிவு நடத்தப்பட உள்ளது. நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், சிலம்பாட்டம் உட்பட பல்சுவை நிகழ்ச்சி வழங்கும் கலைக்குழுக்கள் மார்ச் 22 ம் தேதியும், தெருக்கூத்துகளான இசை நாடகம், கணியான் கூத்து, பொம்மலாட்டம், தோற்பாவை, வில்லுப்பாட்டு மற்றும் பரதநாட்டியம், பழங்குடியினர் நிகழ்ச்சி உள்ளிட்டவை நிகழ்த்துவோர் மார்ச் 23 ம் தேதியும் பசுமலை அரசு இசைக் கல்லுாரியில் நடைபெறும் பதிவு நிகழ்வில் பங்கேற்கலாம்.
பங்கேற்க விரும்புவோர், www.artandculture.tn.gov.in என்ற இணைய தளத்தில் இன்று (மார்ச் 20) மாலைக்குள் விண்ணப்பிக்கலாம். அல்லது மாவட்ட பொறுப்பாளரை (95000 08204) தொடர்பு கொள்ளலாம். இவர்களின் நிகழ்ச்சி வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, கலைப்பண்பாட்டு துறை தேர்வுக்குழுவால் மேற்கண்ட 8 இடங்களில் நடைபெறம் 'சங்கமம்' நிகழ்ச்சியில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவர்.
சிறப்பான நிகழ்ச்சி வழங்குவோர் மாநில குழுவால் தேர்வு செய்யப்பட்டு, 2026ல் சென்னை சங்கமம் விழாவில் பங்கேற்க வாய்ப்பு பெறுவர் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.