/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
செயற்கை கை, கால்களை அசைத்து வேலை செய்யலாம்; அரசு மருத்துவமனை புனர்வாழ்வு துறையின் அரிய சேவை
/
செயற்கை கை, கால்களை அசைத்து வேலை செய்யலாம்; அரசு மருத்துவமனை புனர்வாழ்வு துறையின் அரிய சேவை
செயற்கை கை, கால்களை அசைத்து வேலை செய்யலாம்; அரசு மருத்துவமனை புனர்வாழ்வு துறையின் அரிய சேவை
செயற்கை கை, கால்களை அசைத்து வேலை செய்யலாம்; அரசு மருத்துவமனை புனர்வாழ்வு துறையின் அரிய சேவை
ADDED : ஜன 13, 2025 03:51 AM
மதுரை அரசு மருத்துவமனையில் இயல்பியல், புனர் வாழ்வு மருத்துவத்துறை 2019 டிசம்பரில் துவங்கியது.
சென்னை கே.கே. நகர் அரசு மறுவாழ்வு மையத்திற்கு அடுத்து, மதுரை அரசு மருத்துமவனையில்தான் அதிகளவு முதுகெலும்பு பிளவுக்கான பிரேஸ், ஊன்றுகோல், கை பிளவுக்கான கருவிகள், காலிபர் போன்ற கருவிகள், செயற்கை கை, கால்கள் தயாரித்து வழங்கப்படுகிறது. கடந்தாண்டில் மட்டும் 135 பேருக்கு செயற்கை கை, கால்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து டீன் அருள் சுந்தரேஷ் குமார், பேராசிரியர் ரவிச்சந்திரன், உதவிப் பேராசிரியர்கள் சிந்தியா, வரதராஜன் கூறியதாவது:
கடந்தாண்டில் 549 பேருக்கு 'ஆர்த்தோசிஸ்' எனப்படும் காலிபர், வாக்கர், ஊன்றுகோல், ஷூ, ஸ்பைனல் பிரேசஸ், பெல்ட், ஹேண்ட் பிளவை சரிசெய்யும் கருவிகளை வழங்கியுள்ளோம்.
மதுரை அரசு மருத்துவமனையில் செயற்கை கருவிகள், கை, கால்கள் தயாரிப்பதற்கென 10 பேர் கொண்ட நிபுணர்கள் குழு உள்ளது. தற்போது தனித்தனியாக அசைக்கும் அளவுக்கு எடை குறைவான பொருட்களால் கை, கால்கள், விரல்கள் தயாரிக்கப்படுகின்றன.
மார்ச் 2024ல் தமிழகத்தில் முதன்முறையாக சிவகங்கை பாராலிம்பிக் வீரருக்கு 'கார்பன் பைபர்' பொருளால் ஆன செயற்கை கால் வழங்கியுள்ளோம். நோயாளியின் வயது, வேலை, நடமாடும் சூழ்நிலைக்கேற்ப கை, கால்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்படும். விபத்தில் இருந்து 3 மாதத்திற்கு பின் செயற்கை கை, கால்களைப் பொருத்தலாம். நோயாளிகளை விபத்தில் இருந்து குணப்படுத்துவது மட்டுமின்றி, அவர் பழைய நிலைக்கு திரும்பி, வேலைக்கு செல்வதை உறுதிசெய்து வாழ்க்கைத் தரத்தை நீட்டிப்பதே எங்கள் துறையின் வேலை.
மதுரை அரசு மருத்துவமனை 50 வது வார்டில் திங்கள், வியாழக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ பரிசோதனைக் குழு காலை 10:00 மணி முதல் செயல்படும். மதுரையைச் சேர்ந்தவர்களுக்கு நாங்களே பரிசோதனை செய்து மருத்துவச் சான்று வழங்குகிறோம்.
பிற மாவட்டத்தினர் அவர்களின் மாவட்டத்தில் சான்றிதழ் வாங்கி வரவேண்டும். இந்தச் சான்றிதழ் மூலம் மாத ஓய்வூதியம் ரூ.1500 முதல் ரூ.2000, இலவச பஸ் பாஸ், மத்திய அரசின் இலவச ரயில் பாஸ் பெறலாம். கூடவே ஒருவரும் இலவசமாக பயணிக்கலாம். கடந்தாண்டு 1700 பேருக்கு சான்றிதழ் வழங்கியுள்ளோம்.
தீவிர விபத்து சிகிச்சை பிரிவு வளாகத்தில் உள்ள 833 வது வார்டில் தசைச்சிதைவு, மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தற்போது பக்கவாதம், முதுகுத்தண்டுவட காயம், விபத்தால் ஏற்பட்ட ஊனம், தசைச்சிதைவு நோய்களுக்கும் முதல்வரின் இலவச காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை மற்றும் செயற்கை கை, கால்களும் உபகரணங்களும் வழங்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இத்திட்டத்தில் பயன்பெறலாம் என்றனர்.