ADDED : பிப் 27, 2026 05:11 AM
மதுரை: ' 'இறவை சாகுபடியில் குறைவான நீர், குறைந்த சாகுபடி செலவில் பாசிப்பயறை விதைக்க மாசிப் பட்டம் ஏற்றது'' என மதுரை விதைப்பரிசோதனை அலுவலர் சிவகாமி கூறினார்.
அவர் கூறியதாவது: பாசிப்பயறு அதிக மகசூல் தரும். ஏக்கருக்கு 4 கிலோ விதை தேவை. நிலத்தை சட்டிக்கலப்பையால் உழுது 6ம் நாள் செம்மறி ஆட்டுக்கிடை போட வேண்டும். 3 நாட்கள் கழித்து மறுஉழவும், 2 நாட்கள் கழித்து 2முறை உழது நிலத்தைக் காய விட வேண்டும்.
எட்டடி நீளம், 5 அடி அகலத்தில் பாத்திகள் அமைத்து வாய்க்கால் எடுக்கவேண்டும். விதைப்பரிசோதனை செய்து விதைநேர்த்தி செய்த விதைகளை ஒரு பாத்திக்கு 40 முதல் 50 செடிகள் வருமாறு விதைக்க வேண்டும். விதைத்த 3 முதல் 5 நாட்களில் முளைப்பு தெரியும். வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 20, 30ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். 35, 45ம் நாட்களில் 120 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி பஞ்சகவ்யா கலந்து செடிகளுக்கு தெளிக்க வேண்டும்.
60ம் நாளுக்கு மேல் காய்கள் அறுவடைக்கு வரும். ஒரே பறிப்பாக பறிக்காமல் 65, 72, 80ம் நாட்களில் பறித்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும். இறவையில் ஏக்கருக்கு 500 முதல் 600 கிலோ மகசூல் கிடைக்கும்.
தேர்வு செய்த விதைகளின் புறத்துாய்மை 98 சதவீதம், ஈரப்பதம் 9சதவீதம், முளைப்புத்திறன் 75 சதவீதத்திற்குக் குறையாமல் இருக்க வேண்டும். விதை மாதிரிகளை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள விதைப்பரிசோதனை நிலையத்தில் ரூ.80 கட்டணம் செலுத்தி தரப்பரிசோதனை செய்தபின் விதைக்க வேண்டும் என்றார்.
