/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'நீங்க சொல்லக்கூடாது' : மதுரை மேயர் பதவி விலகும்படி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
/
'நீங்க சொல்லக்கூடாது' : மதுரை மேயர் பதவி விலகும்படி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
'நீங்க சொல்லக்கூடாது' : மதுரை மேயர் பதவி விலகும்படி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
'நீங்க சொல்லக்கூடாது' : மதுரை மேயர் பதவி விலகும்படி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
ADDED : ஆக 30, 2025 04:18 AM

மதுரை: 'மாநகராட்சி மேயரை பதவி விலகுமாறு கூறுவதற்கு அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கு அருகதை இல்லை. 2011 முதல் சொத்து வரி முறைகேடுகளை விசாரிக்க வேண்டும்' என மதுரை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி, கமிஷனர் சித்ரா தலைமையில் நடந்தது. மேயர் பதவி விலகும் வரை பங்கேற்க போவதில்லை என அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.
மூலக்கரை, தத்தனேரி மயான இடங்களில் எரியூட்டு தொகை, புதைப்பு கட்டணம் ரூ.3 ஆயிரத்து 450 நிர்ணயம் என்ற சிறப்பு தீர்மானத்துடன் 38 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் நடந்த விவாதம்:
மேயர் : தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டம் ஆக. 26 முதல் நகர்ப்புற அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியில் 16 ஆயிரத்து 414 மாணவர்கள் பலனடைந்துள்ளனர். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஆயிரத்து 402 மனுக்கள் பெறப்பட்டதில் 3 ஆயிரத்து 281 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள், அதிகாரிகள் இணைந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்க பணியாற்ற வேண்டும்.
ஜெயராஜ், தி.மு.க.:
மக்களின் பிரச்னைகளை தீர்க்க நடத்தப்படும் கூட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்து உள்ளன. கூட்டத்தைப் புறக்கணிப்பதால் பொதுமக்களுக்கான நன்மை தடை படுகிறது. மாநகராட்சி வரி முறைகேடை 2011 முதல் விசாரிக்க வேண்டும் என நிர்வாகம் தரப்பில் வழக்குப் பதிய வேண்டும். முறைகேடில் அவர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் புறக்கணித்துள்ளனர்.
கார்த்திகேயன், காங்.,:
எதுவாக இருந்தாலும் கூட்டத்திற்கு வர வேண்டும். புறக்கணிப்பது அழகல்ல.
குமரவேலு, மா.கம்யூ.,:
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் புறக்கணிக்கவில்லை, ஓடி ஒளிந்து கொண்டனர். 2016 முதல் இம்முறைகேடு சம்பந்தமாக விசாரிக்க வேண்டும் என வழக்கு தொடுத்தால் அ.தி.மு.க., பெரும் புள்ளிகள் சிக்குவர்.
தெரு நாய்களை கட்டுப்படுத்த வாகனங்கள் வாங்க வேண்டும். அல்லது ஏராளமான மனித உயிர்களை பலி கொடுக்க நேரிடும். பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகங்களை உடனே திறக்க வேண்டும்.
சோலை செந்தில்குமார், தி.மு.க.,:
மாநகராட்சி முறைகேடு வழக்கில் 2 எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் கைதாக வாய்ப்பு இருந்ததால் கூட்டத்தை புறக்கணித்து உள்ளனர். முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பாவையும் விசாரிக்க வேண்டும். மேயரை மாற்றச் சொல்வதற்கு அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை. அமைச்சர்களுடன் ஆலோசித்து எதிர்க்கட்சிகள் மீதும் வழக்கு பதிய வேண்டும். இதுகுறித்து தீர்மானம் கொண்டுவர வேண்டும்.
நாகராஜன், துணை மேயர்:
2011ல் இருந்து முறைகேடுகளை விசாரிக்க வழக்கு பதிய வேண்டும். மாதக்கணக்கில் ரோடுகளில் குடிநீர் வீணாவதை சரி செய்ய வேண்டும்.
கமிஷனர் சித்ரா :
2011ல் இருந்து விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் கமர்ஷியல் கட்டடங்கள், இடங்களை ஆய்வு செய்ய கமிஷனருக்கும் உத்தரவு கிடைத்துள்ளது. இரண்டு மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 2011ல் இருந்து முறைகேடுகளை விசாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
பாஸ்கரன், ம.தி.மு.க.,:
நேதாஜி தெருவில் ஆபத்தான வகையில் உள்ள விளம்பரப் பலகையை அகற்ற வேண்டும்.
சையது அபுதாஹிர், தி.மு.க.,:
ரூ.1.5 கோடியில் கட்டிய தயிர் மார்க்கெட்டில் காலியிடங்கள் உள்ளன. அதில் காய்கறி வியாபாரிகளின் கடைகளை அமைத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும்.
சுதன், தி.மு.க.,:
பழங்காநத்தம் மக்கள் நல்வாழ்வு மையத்தில் மருத்துவ சேவைகள் குறைந்துள்ளன. மூன்று வார்டுகளுக்கு அது போதுமானதாக இல்லை. இவ்வாறு பேசினர்.