/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இளம் குற்றவாளிகள் படிப்பாளிகளாக மாற ஆர்வம்
/
இளம் குற்றவாளிகள் படிப்பாளிகளாக மாற ஆர்வம்
ADDED : ஜன 18, 2024 06:29 AM
மதுரை : மதுரை உட்பட 6 மாவட்டங்களில் குற்றங்களில் ஈடுபட்டு இளைஞர் நலக்குழுமத்தில் (சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளி) அடைக்கப்படும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 9 பேர் பள்ளி, ஐ.டி.ஐ.,யில் படித்து வருகின்றனர். இவர்களை பார்த்து மற்ற சிறுவர்களும் படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திருட்டு, அடிதடி, போதையில் தகராறு உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்படும் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மதுரை காமராஜர் ரோட்டில் உள்ள இளைஞர் நல குழுமத்தில் அடைக்கப்படுகின்றனர். மாதந்தோறும் அதிகபட்சமாக 30 சிறுவர்களாவது மதுரை உட்பட 6 மாவட்டங்களில் இருந்து இங்கு அழைத்து வரப்படுகின்றனர்.
சூழ்நிலை காரணமாக குற்றங்களில் ஈடுபட்டு கைதாகி மனஅழுத்தத்திற்கு ஆளாகும் சிறுவர்களுக்கு 'கவுன்சிலிங்' அளிக்கப்படுகிறது. இதில் படிப்பை பாதியில் விட்டதற்கான காரணத்தை கண்டறிந்து, அதைத் தொடர ஏற்பாடு செய்கின்றனர். நீதிபதி ஒருவரின் முயற்சியால் மாநகராட்சி பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் இளம் குற்றவாளி ஒருவர் பள்ளி அளவில் சிறந்த மாணவராக இருக்கிறார்.
இளைஞர் நல குழுமத்தினர் கூறியதாவது: இங்கு வரும் சிறுவர்களில் பலர், பெற்றோரின் கண்காணிப்பில் இல்லாதவர்கள். நட்பு வட்டாரம் சரியில்லாமல் குற்றவாளிகளாக மாறுகின்றனர்.
அவர்களை ரவுடிகள் சிலர் அடியாட்களாக மாற்றி குற்றச்செயல்களில் ஈடுபடச் செய்கின்றனர். இதைத் தவிர்க்கவே அவர்களை படிப்பாளியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம், என்றார்.