/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
பட்டாசு ஆலையில் விபத்து ஒருவர் பலி: 3 பேர் காயம்
/
பட்டாசு ஆலையில் விபத்து ஒருவர் பலி: 3 பேர் காயம்
ADDED : ஆக 25, 2024 02:25 AM

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த திருவாலங்காடு காவிரி ஆற்றங்கரை பகுதியில் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிப்பு கூடம் உள்ளது. தகர ஷீட்டால் மேற்கூரை அமைக்கப்பட்ட கட்டடத்தில் நேற்று 4 தொழிலாளர்கள் பேன்சி பட்டாசுகள், வாணவெடி மற்றும் நாட்டு வெடிகள் தயாரித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ஏற்பட்ட விபத்தில் பட்டாசு ஆலை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று வெகுநேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் ஆலையில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த திருவாவடுதுறை, மேல புதுத்தெரு உத்தமன் மகன் கர்ணன்,25; உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்து உயிருக்கு போராடிய திருவாலங்காடு கலியபெருமாள்,52; லட்சுமணன்,45; திருவாவடுதுறை குமார்,37; ஆகியோரை தீயணைப்பு படையினர் மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவ இடத்தை கலெக்டர் மகாபாரதி, எஸ்.பி., ஸ்டாலின் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது கலெக்டர் கூறுகையில், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து, அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வெடி விபத்தில் இறந்த கர்ணனுக்கு, ரஞ்சனி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் பிறந்து 30 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

