வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: பதவி விலகினார் முன்னாள் எம்எல்ஏ
வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: பதவி விலகினார் முன்னாள் எம்எல்ஏ
ADDED : மார் 31, 2026 08:02 AM
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பி.வி. பாரதி. ஊராட்சி மன்ற தலைவர், யூனியன் சேர்மன் மற்றும் 2016- 2021 ஆம் ஆண்டு சீர்காழி தொகுதி எம்எல்ஏ வாக பதவி வகித்தார்.
தொடர்ந்து நடந்த தேர்தலில் தோல்வியுற்ற இவர் இம்முறை சீர்காழி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால் முன்னாள் எம்எல்ஏ சக்தி என்பவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாரதி தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக கூறி அவர் வகித்து வரும் மாவட்ட அவை தலைவர் பதவியை ராஜினாமா செய்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது;
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வேட்பாளர் அறிவிப்பில் சீர்காழி தொகுதி வேட்பாளர் தேர்வில் மன வருத்தம் அடைகிறேன். மயிலாடுதுறை மாவட்டத்தில் கட்சிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களை தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையில் மண்டல அமைப்பாளர் ஓ எஸ் மணியன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் மிகுந்த மன வருத்தத்துடன் மயிலாடுதுறை மாவட்ட அவை தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் பதவியை ராஜினாமா செய்தாலும் என்றென்றும் அதிமுகவுக்கும் அதிமுக தலைமைக்கும் விசுவாசம் மிக்க தொண்டனாக செயல்படுவேன். எனது முடிவில் தவறு இருந்தால் அதிமுக தொண்டர்கள் என்னை மன்னிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
