காங்கிரசார் மீது தி.மு.க.,வினர் தாக்குதல் மயிலாடுதுறையில் பரபரப்பு
காங்கிரசார் மீது தி.மு.க.,வினர் தாக்குதல் மயிலாடுதுறையில் பரபரப்பு
ADDED : மே 09, 2026 02:01 AM

மயிலாடுதுறை: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தை, ஆட்சி அமைக்க அழைக்காத, கவர்னரை கண்டித்து, மயிலாடுதுறையில் நேற்று காங்., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பானு சேகர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், காங்., நிர்வாகிகள் பலரும் பங்கேற்று, கவர்னர் அர்லேக்கர் மற்றும் பா.ஜ.,வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும், பானு சேகர் உள்ளிட்ட காங்., கட்சியினர் புறப்பட்டபோது, அங்கு வந்த தி.மு.க., மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மருது தலைமையிலான தி.மு.க.,வினர், 'எங்கள் தலைவருக்கு துரோகம் செய்துவிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்த வந்தீங்களா?' என கேட்டு, காங்., கட்சியினரிடம் இருந்த கட்சி கொடிகளை பறித்து சாலையில் வீசியதுடன், அக்கட்சியினரை சரமாரியாக தாக்கினர்.
இதில், காங்., நிர்வாகி ராஜா காயமடைந்தார். தி.மு.க.,வினரின் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள, காங்., கட்சியினர் அலறியடித்து ஓடி, வாகனங்களில் ஏறி தப்பினர். இச்சம்பவம், மயிலாடு துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
