/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
திருவாவடுதுறை ஆதீன பட்டன பிரவேசம்
/
திருவாவடுதுறை ஆதீன பட்டன பிரவேசம்
ADDED : ஜன 26, 2026 09:47 AM

நமது நிருபர்
திருவாவடுதுறை ஆதின பட்டின பிரவேசத்தில் திரளான பக்தர்கள் குரு மகா சன்னிதானம் எழுந்தருளிய பல்லக்கை சுமந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறை ஆதீனத்தை 14ம் நூற்றாண்டில் தோற்றுவித்த நமச்சிவாய மூர்த்திகள் மகரத் தலைநாள் குருபூஜை விழா கடந்த மாதம் 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. குருபூஜையின் 10ம் நாள் விழாவில் குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் தோத்திரப் பாடல்கள் பாராயணம் நடந்தது. தொடர்ந்து நமசிவாய மூர்த்திகளுக்கு குருபூஜை விழா சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.
அதனையடுத்து நமச்சிவாய மூர்த்திகள் சன்னதியில் அறிஞர்களுக்கு குருமகா சன்னிதானம் பொற்கிழி, விருதுகள் வழங்கி அருளாசி வழங்கினார். மதியம் மாகேசுவர பூஜைம், சாதுகளுக்கு வஸ்திரம் வழங்கும் நிகழ்வும், மாலை வீணை இசை கச்சேரியும் நடந்தது. திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சன்னிதானம் கோமுக்தீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்தார். தொடர்ந்து நமசிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
குருமகா சன்னிதானம் விழா மலரை வெளியிட்டார் அதனை மதுரை ஆதீனம், செங்கோல் ஆதீனம், துழாவூர் ஆதீனம், திண்டுக்கல் ஆதீனம் குருமகா சன்னிதானங்கள் மற்றும் துழாவூர் ஆதீனம் இளவரசு சுவாமிகள் பெற்றுக் கொண்டனர். பின்னர் திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலமான தேசிய பரமாசாரிய சுவாமிகள் 1 லட்சத்து 8 ருத்ராட்ச மணிகளால் ஆன தலைவடம், பவளமணி, கெண்டைமணி, பட்டு தலைக்குஞ்சம் அலங்காரத்துடன் தங்கப் பாதரட்சை அணிந்து, சிவிகாரோகணம் செய்தருளினார்.
தொடர்ந்து திருமுறை இன்னிசை மற்றும் மங்கள, கயிலை வாத்தியங்களுடன், வான வேடிக்கை முழங்க, முன்னே குதிரைகள் ஆட்டத்துடன் பட்டனப் பிரவேசம் நடந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் குருமகா சன்னிதானத்திற்கு ஆரத்தி எடுத்தனர். நிறைவாக இன்று அதிகாலை ஆதீன திருமடத்தின் கொலு மண்டபத்தில் குருமகா சன்னிதானம் சிவஞானக் கொலுக் காட்சியில் அருட் பிரசாதங்களை வழங்கி அருளினார்.
ஆதீன தம்பிரான்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து குருவர்களை பெற்றனர்.

