காங்.,. கட்சியினரை தாக்கிய தி.மு.க.,வினர் நால்வர் கைது
காங்.,. கட்சியினரை தாக்கிய தி.மு.க.,வினர் நால்வர் கைது
ADDED : மே 10, 2026 01:47 AM
மயிலாடுதுறை:மயிலாடுதுறையில் காங். நிர்வாகிகளை தாக்கிய தி.மு.க.வினர் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டது. அதனால், தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட வெற்றி பெற்ற காங்., கட்சி எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.விற்கு ஆதரவு தெரிவித்தனர். இதன்காரணமாக காங்., மீது தி.மு.க.வினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், த.வெ.க.வை ஆட்சியமைக்க காலம் தாழ்த்தியதாக தமிழக கவர்னரை கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நேற்று முன்தினம், மாவட்ட தலைவர் பானு சேகர் தலைமையில் காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் முடிந்து, காங்., கட்சியினர் அருகில் உள்ள டீக்கடையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தி.மு.க.,வினர்,. த.வெ.க.,வுக்கு ஆதரவு அளித்ததை கண்டித்து காங்., கட்சியினரை தாக்கி விரட்டியடித்தனர். மேலும் காங்., கட்சி கொடியையும் சேதப் படுத்தினர்.
இது குறித்து காங்., வட்டாரத் தலைவர் ராஜன் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகள் மருது என்கிற மருதமுத்து,39, வின்சென்ட்,53, ரகு,56, ஜெயச்சந்திரன்,51, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். பின்னர் நான்கு பேரையும் போலீஸ் ஸ்டேஷன் பெயிலில் விடுவித்தனர்.
