/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
பிறந்த சில நாட்களில் குழந்தை இறப்பு; உறவினர்கள் போராட்டத்தால் டாக்டர் சஸ்பெண்ட்!
/
பிறந்த சில நாட்களில் குழந்தை இறப்பு; உறவினர்கள் போராட்டத்தால் டாக்டர் சஸ்பெண்ட்!
பிறந்த சில நாட்களில் குழந்தை இறப்பு; உறவினர்கள் போராட்டத்தால் டாக்டர் சஸ்பெண்ட்!
பிறந்த சில நாட்களில் குழந்தை இறப்பு; உறவினர்கள் போராட்டத்தால் டாக்டர் சஸ்பெண்ட்!
ADDED : நவ 11, 2024 08:13 PM

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பிறந்த குழந்தை இறந்த சம்பவம் தொடர்பாக, மகப்பேறு மருத்துவர் ரம்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே மரத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன்.34. டிரைவர். இவருக்கும் சிவரஞ்சனி.27. என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. சிவரஞ்சனி மீண்டும் கர்ப்பம் அடைந்து பிரசவத்திற்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கடந்த 6-ம் தேதி சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தொடர்ந்து குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் 2 நாட்கள் இன்குபேட்டரில் வைத்து கண்காணித்தனர்.தொடர்ந்து உடல் நலம் சீராகாததால் டாக்டர்கள் குழந்தையை மேல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து குழந்தையை சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை இருதயத்துடிப்பு குறைந்து குழந்தை இறந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட வேண்டிய குழந்தையை சுகப்பிரசவம் ஆகும் வரை காத்திருந்ததால் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டது என குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை அடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பும் பின்னர் மயிலாடுதுறை கும்பகோணம் சாலையிலும் குழந்தையின் உடலுடன் பெற்றோர், உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனை அடுத்து சிவரஞ்சனிக்கு சிகிச்சை அளித்த மகப்பேறு டாக்டர் ரம்யாவை சுகாதாரத்துறை இணை இயக்குனர் பானுமதி தற்காலிக பணியிடை நீக்கம் செய்தார்.
ஆனால் அதனை ஏற்காத போராட்டக்காரர்கள் டாக்டரை கைது செய்ய வேண்டும், இறந்த குழந்தைக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 4 மணி நேரத்திற்கு மேலாக மறியலில் தொடர்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. இதனிடையே, குழந்தை உயிரிழந்து 12 மணி நேரத்துக்கு மேல் ஆவதால், குழந்தையின் உடலை அடக்கம் செய்யாமல் திறந்தவெளியில் வைத்திருப்பது நோய் தொற்று, சுகாதார சீர்கேட்டுக்கு வழி வகுக்கும். எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என போலீஸார் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்த நிலையில், ப்ரீஸர் பாக்ஸ் வரவழைத்து அதில் குழந்தையின் உடலை வைத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
கடைசியில், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.