ஓட்டுச்சாவடி பாதுகாப்பு பணி போலீஸ்காரருக்கு கத்திக்குத்து
ஓட்டுச்சாவடி பாதுகாப்பு பணி போலீஸ்காரருக்கு கத்திக்குத்து
ADDED : ஏப் 24, 2026 03:57 AM

மயிலாடுதுறை: பொறையார் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரரை, ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் போலீஸ் ஸ்டேஷனில், தலைமை காவலராக பணியாற்றுபவர் விக்னேஷ், 37. இவர், தரங்கம்பாடி தாலுகா, பொறையார் தனியார் பள்ளியில், நேற்று அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒருவர், தான் கையில் வைத்திருந்த கத்தியால் திடீரென விக்னேஷை சரமாரியாக குத்தியுள்ளார். இதில், விக்னேஷின் கைகள் மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் விக்னேஷை மீட்டு, சிகிச்சைக்காக பொறையார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பொறையார் போலீசார், விக்னேஷை குத்திய நபரை கைது செய்து நடத்திய விசாரணையில், அவர், காட்டுச்சேரி கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பிரபாகரன், 57, என, தெரிந்தது. பிரபாகரன் மீது ஏற்கனவே போலீசாரை தாக்கிய வழக்கு நிலுவையில் உள்ளது.
