ADDED : ஏப் 23, 2026 06:41 PM
மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணியாற்றுபவர் விக்னேஷ்,37. இவர் தரங்கம்பாடி தாலுகா பொறையார் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒருவர், தான் கையில் வைத்திருந்த கத்தியால் திடீரென விக்னேஷை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் விக்னேஷின் கைகள் மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் விக்னேஷை மீட்டு சிகிச்சைக்காக பொறையார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவல் அறிந்து வந்த பொறையார் போலீசார், விக்னேஷை கத்தியால் குத்திய நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், அவர் காட்டுச்சேரி கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பிரபாகரன்,57, என தெரிய வந்தது.
வழக்கு பதிந்த போலீசார், பிரபாகரனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபாகரன் மீது ஏற்கனவே போலீசாரை தாக்கிய வழக்கு நிறுவையில் உள்ளது.
