/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தும் ஸ்டாலின்'
/
அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தும் ஸ்டாலின்'
ADDED : ஜூலை 18, 2025 02:44 AM
மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டத்தில், 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசியதாவது:
மயிலாடுதுறைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், நான் எதுவுமே செய்யவில்லை என, பொய் பேசி உள்ளார். இந்த மாவட்டத்தையே உருவாக்கி கொடுத்தவன் நான். அ.தி.மு.க., ஆட்சியில் பல்வேறு கல்லுாரிகளை புதிதாக கட்டினோம்.
ஆனால், படிப்பு என்றால் பழனிசாமிக்கு கசக்கும் என, ஸ்டாலின் வாய் கூசாமல் கூறியிருக்கிறார். மயிலாடுதுறைக்கும், தமிழகத்திற்கும் ஸ்டாலின் எந்த நல்லதாவது செய்திருக்கிறாரா? குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காகவே அவர் செயல்படுகிறார்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது அ.தி.மு.க., அரசு. 50 ஆண்டு கால பிரச்னையான காவிரி பிரச்னையை தீர்த்து வைத்ததும் நாங்கள் தான். புயல், வெள்ளத்தின் போதும் மக்களை காத்தது அ.தி.மு.க., தான்.
கச்சத்தீவை மீட்போம் என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், கச்சத்தீவை தாரைவார்த்ததே அப்போதைய தி.மு.க., தலைவர் கருணாநிதி தான். மீனவர்கள் மீது தி.மு.க.,வுக்கு அக்கறை இல்லை.
மீனவ சமுதாயத்தினரின் ஓட்டுகளை பெற, முதல்வர் ஸ்டாலின் தந்திரமாக அறிக்கை விடுகிறார். மத்திய அரசு மீது பழிபோட்டு, மீனவர்களின் ஓட்டுகளை பெற அவர் முயற்சிக்கிறார். அவர் என்ன செய்தாலும், அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை தமிழக மக்கள் வீட்டுக்கு அனுப்புவது உறுதி.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்துக்காக, முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாகச் செல்கிறார். இதற்கு அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். இத்திட்டத்திற்கு அரசு இயந்திரத்தை ஸ்டாலின் தவறாக பயன்படுத்துகிறார். அரசு பணத்தை வைத்து அவர் விளம்பரம் தேடுகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.

