/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து துவக்கம்
/
நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து துவக்கம்
நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து துவக்கம்
நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து துவக்கம்
ADDED : ஆக 17, 2024 01:40 AM

நாகப்பட்டினம்:இந்தியா- -- இலங்கை நாடுகள் இடையே வர்த்தகம், சுற்றுலா மேம்பட பயணியர் கப்பல் சேவையை கடந்த ஆண்டு, அக்., 14ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
இந்திய கப்பல் கழகத்துக்கு சொந்தமான, 'சிரியாபாணி' என்ற கப்பல் சேவையை துவக்கியது. பருவக்கால மாற்றத்தால் சில தினங்களில் சேவை நிறுத்தப்பட்டது. இது இரு நாட்டு சுற்றுலா பயணியரிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
பின், இரு நாட்டிற்கான கப்பல் போக்குவரத்துக்கான சேவை தனியார் நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த மே மாதம் கப்பல் போக்குவரத்து துவங்கும் என அறிவிக்கப்பட்டாலும், பல்வேறு காரணங்களால் துவக்கப்படவில்லை.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன், 150 பேர் பயணிக்கும் வகையில், சிவகங்கை என்ற சிறிய கப்பல் நாகை வந்து, சோதனை ஓட்டம் நடந்தது. நேற்று புதுச்சேரி அமைச்சர் நமசிவாயம், செல்வராஜ் எம்.பி., கலெக்டர் ஆகாஷ் ஆகியோர் கொடியசைத்து கப்பல் சேவையை துவக்கி வைத்தனர்.
நண்பகல், 12.20 மணிக்கு, 44 பயணியருடன் புறப்பட்ட கப்பல் மாலை இலங்கை காங்கேசன்துறையைச் சென்றடைந்தது. இன்று காலை, 10:00 மணிக்கு காங்கேசன்துறையில் புறப்பட்டு மதியம், 2:00 மணிக்கு கப்பல் நாகை வந்தடைகிறது.
அமைச்சர் நமசிவாயம் கூறுகையில், ''மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் போக்குவரத்தை நெறிப்படுத்த பிரதமர் மோடி திட்டங்களை வகுத்துள்ளார். தரைவழி, வான்வழி, கடல்வழி என, அனைத்துவித போக்குவரத்தும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது பிரதமரின் எண்ணம்.
இது மென்மேலும் விரிவடைந்து நாகைக்கும், இலங்கைக்கும் இடையில் ஏற்றுமதி இறக்குமதி நடக்கும்போது இரு நாட்டிற்குமான உறவு பலப்படும்,'' என்றார்.