/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
நாகையில் விஸ்வரூப அத்தி விநாயகர் வீதியுலா
/
நாகையில் விஸ்வரூப அத்தி விநாயகர் வீதியுலா
ADDED : செப் 09, 2024 04:43 AM

நாகப்பட்டினம்: நாகையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 32 அடி உயர விஸ்வரூப அத்தி விநாயகர் மற்றும் 115 விநாயகர் சிலைகள் ஊர்வலம் விமர்சையாக நடந்தது.
நாகையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, நீலாயதாட்சி அம்மன் கோவில் முகப்பில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் புறப்பட்டது. 32 அடி உயரத்தில் அத்திமரத்தால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலை, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைக்கப்பட்டு வீதியுலா நடந்தது. மயிலாட்டம், புலியாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம், கதகளி, கரகாட்டம் மற்றும் 30க்கும் மேற்பட்ட வாத்தியங்கள் முழங்க வீதியுலா நடைபெற்றது.
முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த ஊர்வலம், நேற்று காலை நாகூர் வெட்டாற்று பகுதியை வந்தடைந்தது. பிரதிஷ்டை செய்யப்பட்ட களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள், பைபர் படகு மூலம் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.
அதே போல் சக்தி விநாயகர் குழுவினர் சார்பில், நாகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 115 விநாயகர் சிலைகள், நேற்று காலை நாகை சவுந்திரராஜ பெருமாள் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது.
அங்கிருந்து விநாயகர் சிலை ஊர்வலத்தை, பா.ஜ., தேசிய செயலாளர் வரதராஜன் துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் வழியெங்கும் பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபட்டனர். புதிய கடற்கரைக்கு வந்த விநாயகர் சிலைகள் சிறப்பு தீபாராதனைக்கு பின் படகுகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது.