/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதல் நாகை மீனவர்கள் 4 பேர் காயம்
/
இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதல் நாகை மீனவர்கள் 4 பேர் காயம்
இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதல் நாகை மீனவர்கள் 4 பேர் காயம்
இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதல் நாகை மீனவர்கள் 4 பேர் காயம்
ADDED : ஏப் 18, 2025 02:42 AM
நாகப்பட்டினம்:கோடியகரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை, இலங்கை கடற்கொள்ளையர் சரமாரியாக தாக்கி, பல லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
தமிழக கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்.,15 ம் தேதி முதல் ஜூன் 14 வரையில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இக்காலத்தில் விசைப்படகில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளை சேர்ந்த மீனவர்கள், நாகை மாவட்டம் கோடியக்கரையில் தங்கி பைபர் படகில் மீன்பிடிக்க செல்வது வழக்கம்.
அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பேட்டையை சேர்ந்த கவிதாசன்,32, என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், கடந்த 14 ம் தேதி மதியம் 4 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே 13 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அதிவேக இன்ஜின் பொருத்தப்பட்ட படகில் இலங்கையை சேர்ந்த 3 பேர் வந்துள்ளனர். கவிதாசன் படகில் இருந்தவர்களை ஆயுதங்களால் தாக்கி, படகில் இருந்த ஜி.பி.எஸ்., கருவி, மொபைல் போன்கள், வாக்கி டாக்கி, டார்ச் லைட், தூண்டில் போன்ற மீன் பிடி உபகரணங்கள் மற்றும் படகில் இருந்த 50 கிலோ மீன்களை தங்கள் படகில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.
கடல் கொள்ளையர்கள் கத்தியால் வெட்டியதில் படுகாயமடைந்த 4 மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். அவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல், வேளாங்கண்ணி அடுத்த செருதுாரில் இருந்து கடந்த 15ம் தேதி இரவு கோவிந்தசாமி,45, என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் 4 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
நேற்று மூன்தினம் இரவு கோடியக்கரைக்கு கிழக்கில் 16 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அதிவேக இன்ஜின் பொருத்தப்பட்ட படகில் ஆயுதங்களுடன் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மூவர் கோவிந்தசாமி படகில் இருந்தவர்களை தாக்கி, படகில் இருந்த இஞ்சின் மற்றும் மீன்கள், மீன்பிடி உபகரணங்களை தங்கள் படகில் ஏற்றி சென்றனர்.
பாதிக்கப்பட்ட மீனவர்கள் நேற்று வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசாரிடம புகார் அளித்துள்ளனர்.

