/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் வேண்டாம் என்கின்றனர் விவசாயிகள்
/
நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் வேண்டாம் என்கின்றனர் விவசாயிகள்
நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் வேண்டாம் என்கின்றனர் விவசாயிகள்
நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் வேண்டாம் என்கின்றனர் விவசாயிகள்
ADDED : ஜன 19, 2025 11:37 PM

நாகப்பட்டினம்: டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில், 6 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி நடந்துள்ளன.
பருவம் தப்பிய மழையால், நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு பெரும் இன்னலுக்கு உள்ளான விவசாயிகள், சிரமத்துக்கு இடையில் சம்பா அறுவடையை துவக்கியுள்ளனர்.
விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
இதை தவிர்த்து, விளை நிலங்களுக்கே சென்று நெல் கொள்முதல் செய்வதும் உண்டு. இதில் பெரும் முறைகேடு நடப்பதாகவும், அந்த திட்டத்தை அரசு முடக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில கொள்கை பரப்பு செயலர் தமிழ்செல்வன் கூறியதாவது: விவசாய சங்கங்கள் என்ற போர்வையில், வியாபாரிகளின் சுய லாபத்திற்காக, 'மொபைல் பர்சேஸ்' என்ற விளை நிலங்களுக்கு சென்று நெல் கொள்முதல் செய்யும் நடைமுறையை நுகர்பொருள் கழக அதிகாரிகள் வைத்துள்ளனர். இதில் பெரிய முறைகேடு நடக்கிறது.
விவசாயிகள் போர்வையில் சில வியாபாரிகள், கடந்த ஆண்டு அவர்கள் கொள்முதல் செய்த நெல், மக்கி போன, துாற்றாமல் அதிக ஈரப்பதமுள்ள நெல் போன்ற தரமற்ற நெல்லை, நுகர்பொருள் வாணிப கழக பட்டியல் எழுத்தர்களை சரிகட்டி விற்பனை செய்து விடுகின்றனர்.
விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் தரமான நெல் மூட்டைகளோடு, தரமற்ற நெல் மூட்டைகளும் கலந்து அரவைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதனால், பொதுமக்களுக்கு தரமற்ற அரிசி தான் கிடைக்கும். சிலரின் முறைகேடுகளால் மத்திய, மாநில அரசுகளின் நோக்கமே கேள்விக்குறியாகியுள்ளது.
முறைகேடுகளுக்கு வழி வகுக்கும் மொபைல் பர்சேஸ் திட்டத்தை அரசு செயல்படுத்தக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.