/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
சுனாமியில் உறவுகளை இழந்தவர்களுடன் அரசு செயலர் குடும்பம் உருக்கமான சந்திப்பு
/
சுனாமியில் உறவுகளை இழந்தவர்களுடன் அரசு செயலர் குடும்பம் உருக்கமான சந்திப்பு
சுனாமியில் உறவுகளை இழந்தவர்களுடன் அரசு செயலர் குடும்பம் உருக்கமான சந்திப்பு
சுனாமியில் உறவுகளை இழந்தவர்களுடன் அரசு செயலர் குடும்பம் உருக்கமான சந்திப்பு
ADDED : டிச 22, 2024 11:49 PM

நாகப்பட்டினம்; சுனாமியால் ஆதரவற்றவர்களாகி, எவ்வித பாகுபாடுமின்றி, ஒரு மரத்து கிளிகளாக வளர்ந்து, திசைக்கொருவராக பிரிந்து வாழ்பவர்கள், மீண்டும் ஒன்று சேர்ந்து, தங்கள் நினைவுகளை பசுமையாக அசை போட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நாகை மாவட்டத்தில், கடந்த 2004ல், கோரத்தாண்டவம் ஆடிய சுனாமியில், பெற்றோர் மற்றும் உறவுகளை இழந்த, 167 குழந்தைகள், அன்னை சத்யா காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தனர்.
அப்போது நாகை, கலெக்டராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன், காப்பகத்தில் இருந்த 167 குழந்தைகள் மீதும் தனி கவனம் செலுத்தி வந்தார். தினமும் காப்பகத்திற்கு குடும்பத்துடன் வந்து, சில மணி நேரங்களை ஆதரவற்ற குழந்தைகளுடன் செலவழித்தார்.
குழந்தைகளை தனது குழந்தைகளாகப் பாவித்து, பெற்றோரை போல கவனித்துக் கொண்டதால், ராதாகிருஷ்ணனை அப்பா என்றும் அவரது மனைவி கிருத்திகாவை அம்மா என்றே குழந்தைகள் அழைத்து வந்தனர்.
பதவி உயர்வில் ராதாகிருஷ்ணன் நாகையை விட்டுச் சென்றாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அன்னை சத்யா காப்பகத்திற்கு வந்து குழந்தைகளை பார்த்து செல்லத் தவறியதில்லை.
இந்நிலையில் காப்பகத்தில் இருந்த பல குழந்தைகள் வளர்ந்து திருமணமாகி சென்று விட்டனர். 20 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், ராதாகிருஷ்ணன் தம்பதியை பார்க்க வேண்டும் என அவர்கள் ஆசைப்பட்டனர்.
அதை அறிந்த ராதாகிருஷ்ணன், அன்னை சத்யா காப்பகத்தில் நேற்று அவர்களை சந்தித்தார். நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கடலோர கிராமங்களில் சுனாமி நினைவு தின அஞ்சலி செலுத்த வந்த ராதாகிருஷ்ணன், அன்னை சத்யா காப்பகம் வந்தார்.
அங்கு தாயை தேடி வந்த குழந்தைகள் போல, ஏக்கத்துடன் குடும்பமாய் காத்திருந்த சுனாமி பாதிப்பு நபர்கள், அப்பா என உணர்ச்சி பெருக்குடன் ராதாகிருஷ்ணன் தம்பதியை சூழ்ந்து கொண்டு நீண்ட நேரம் பேசினர்.
அவர்களின் அன்பில் பரவசமடைந்த ராதாகிருஷ்ணன் தம்பதி, ஆனந்தக் கண்ணீரை துடைத்துக் கொண்டனர். இதனால் அந்த இடமே நெகிழ்ச்சியுடன் காணப்பட்டது.
அனைவரையும் தனித்தனியே பெயர் கூறி அழைத்து, உடன் வந்த கலெக்டர் ஆகாஷிடம் அறிமுகப்படுத்தி, சிறு வயதில் அவர்களின் சேட்டைகளை கூறி சிலிர்க்க வைத்தார் ராதாகிருஷ்ணன். அனைவருக்கும் சால்வை அணிவித்து, புத்தகங்களை வழங்கினார்.
அரசு கூடுதல் முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''பேரிடரால் பாதிக்கப்பட்டாலும் அதிலிருந்து மீண்டு வந்து, இன்று பல உயர்ந்த நிலைகளில் உள்ளனர்.
''அப்பா, அம்மா என அவர்கள் அழைப்பதற்கு இணையானது எதுவும் கிடையாது. இப்போது தாத்தா, பாட்டியாக மாறியிருப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது,'' என்றார்.