/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
அ.தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட வேண்டும் இந்திய கம்யூ., ராஜா ஆவேசம்
/
அ.தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட வேண்டும் இந்திய கம்யூ., ராஜா ஆவேசம்
அ.தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட வேண்டும் இந்திய கம்யூ., ராஜா ஆவேசம்
அ.தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட வேண்டும் இந்திய கம்யூ., ராஜா ஆவேசம்
ADDED : ஏப் 19, 2025 12:46 AM
நாகப்பட்டினம்:நாட்டின் மத நல்லிணக்கம், சமூக நீதிக்கு எதிராக செயல்படும் பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்த அ.தி.மு.க.,வுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என இந்திய கம்யூ., தேசிய பொதுச் செயலாளர் ராஜா பேசினார்.
அகில இந்திய விவசாயிகள் சங்க 30வது தேசிய மாநாடு நாகையில் கடந்த 15 ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. 19 மாநிலங்களில் இருந்து 697 விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மாநாட்டில், சிறுபான்மை உரிமைகளை மீறும் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராகவும், சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியினர் பகுதிகளை ராணுவ மண்டலமாக மாற்றியதற்கு எதிர்ப்பு, இந்தியா மீதான அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான வரிகள், விவசாய வர்த்தக அழுத்தம் கண்டிப்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாடு நிறைவுக்கு பின், காடம்பாடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தேசிய பொதுச் செயலாளர் ராஜா பேசியதாவது,
நம் நாட்டில் பல மதங்கள், பல மொழிகள் உள்ளன. நல்லிணக்கத்தோடு மக்கள் வாழ வேண்டிய நாடு. மதத்தின் பெயரால் ஆர்.எஸ்.எஸ்., வெறுப்பை வளர்க்கிறது. இது அரசியல் சட்டத்திற்கு, அம்பேத்கர் கொள்கைக்கு எதிரானது. எல்லோரும் எல்லாம் பெற்று கன்னியமான வாழ்க்கை வாழ அரசியல் சட்டம் கூறுகிறது. கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, குடியிருப்பு, உணவு உற்பத்திக்கு மோடி ஆட்சியில் முக்கியத்துவம் தரப்படுவதில்லை.
இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு, ஜனநாயம், கலாசாரம் கொண்ட நாடு என்பதில் நாம் அனைவரும் பெருமைக் கொள்ள வேண்டும். அதை விடுத்து ஒற்றை பரிமான நாடாக மாற்ற, ஒரே நாடு, ஒரே மதம், ஒரு கலாசாரம், ஒரு மொழி என்று வருமானால் இந்தியா, இந்தியாவாக இருக்காது.
மத்திய அரசு வேளாண்மைக்கு தனி பட்ஜெட் வைக்க வேண்டும். விவசாய கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும்.. இடு பொருட்கள் விலை கட்டுப்படுத்த வேண்டும். உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்றால் மோடி ஆட்சி அகற்றப்பட வேண்டும்.. மத நல்லிணக்கம், சமூக நீதி காப்பாற்றப்பட பா.ஜ., அகற்றப்பட வேண்டும்.
தமிழகத்தில் பா.ஜ., காலுான்ற அனுமதிக்ககூடாது. பா.ஜ., மதவாத கட்சி என்பதை உணர வேண்டும். அக்கட்சியுடன் அ.தி.மு.க., சேர்ந்ததற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

