/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
கடைமடையில் உரம் தட்டுப்பாடு நாகை விவசாயிகள் குமுறல்
/
கடைமடையில் உரம் தட்டுப்பாடு நாகை விவசாயிகள் குமுறல்
கடைமடையில் உரம் தட்டுப்பாடு நாகை விவசாயிகள் குமுறல்
கடைமடையில் உரம் தட்டுப்பாடு நாகை விவசாயிகள் குமுறல்
ADDED : நவ 23, 2025 02:21 AM

நாகப்பட்டினம்: காவிரியின் கடைமடையான நாகை மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடு நிலவுவதால், அழுகும் சம்பா மற்றும் தாளடி இளம்பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும் என, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
நாகை மாவட்டத்தில், ஒரு லட்சத்து 62 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி நடந்துள்ளது. 60 சதவீதம் நேரடி நெல் விதைப்பு மூலம் பயிர் செய்யப்பட்டுள்ளது. பருவ மாற்றத்தால் பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க, டி.ஏ.பி., மற்றும் யூரியா உரங்களை பயிர்களுக்கு விவசாயிகள் தெளித்துள்ளனர்.
பெரும்பாலான இடங்களில் 40 நாட்கள், சில பகுதிகளில் 20 நாட்கள் பயிர்கள் வளர்ந்த நிலையில், பருவ நிலை மாற்றத்தால் கனமழை கொட்டி வருகிறது. இதனால் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் இளம் பயிர்கள் மூழ்கி கிடக்கிறது. நாற்றாங்கால் நடவு செய்யப்பட்ட பகுதிகளில் பயிர்கள் செழிப்பாக உள்ளது.
மூழ்கி கிடக்கும் பகுதிகளி ல் வெள்ள நீர் வடிந்த பின், இளம் பயிர்களை காப்பாற்ற, டி.ஏ.பி., உரம், மற்ற பகுதிகளுக்கு யூரியா உரங்கள் தெளிப்பதற்கு உரங்கள் கையிருப்பு இல்லை என, வியாபாரிகள் கைவிரிக்கின்றனர்.
மாற்றாக, தேவையற்ற பொருட்களை வாங்க நிர்ப்பந்தித்து கூடுதல் விலைக்கு விற்பனை நடப்பதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்செல்வன் கூறுகையில், விளை நிலங்களுக்கு அடி உரமாக ஏற்கனவே டி.ஏ.பி., மற்றும் யூரியா தெளித்த நிலையில், மழையினால் மீண்டும் உரமிட வேண்டியுள்ளது. ஆனால், கூட்டுறவு சங்கங்களில் போதுமான இருப்பு இல்லாததால், தனியார் சில்லறை உரக்கடைகளையே விவசாயிகள் நாடி செல்கின்றனர். சர்வதேச அளவில் டி.ஏ.பி.., மூலப்பொருளான பாஸ்பரஸ் அமிலம்'' விலையேற்றம் காரணமாக இந்தியளவில் டி.ஏ.பி., உற்பத்தியில் மந்தமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டி.ஏ.பி., தட்டுப்பாடு நிலவுகிறது.
யூரியா ஒரு மூட்டை வாங்கும் போது, தேவையற்ற நுண்ணுயிர் உரம், இடு பொருட்கள் என 800 ரூபாய்க்கு விவசாயிகள் தலையில் கட்டுகின்றனர். ஏற்கனவே இழப்பை சந்தித்துள்ள விவசாயிக்கு தனியார் உர விற்பனையாளர்கள் நிர்ப்பந்தம் மேலும் வேதனையளிக்கிறது என்றார்.

