/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
அதிகாரிகள் குளறுபடியால் கொள்முதல் பாதிப்பு : நெல்மணிகள் நனைவதால் விவசாயிகள் கவலை
/
அதிகாரிகள் குளறுபடியால் கொள்முதல் பாதிப்பு : நெல்மணிகள் நனைவதால் விவசாயிகள் கவலை
அதிகாரிகள் குளறுபடியால் கொள்முதல் பாதிப்பு : நெல்மணிகள் நனைவதால் விவசாயிகள் கவலை
அதிகாரிகள் குளறுபடியால் கொள்முதல் பாதிப்பு : நெல்மணிகள் நனைவதால் விவசாயிகள் கவலை
ADDED : அக் 22, 2025 07:50 PM

நாகப்பட்டினம்: காவிரி கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தில், கனமழையால் குறுவை சாகுபடி நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில், நடப்பாண்டு 1 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நெற்பயிர்கள் செழிப்பாக வளர்ந்ததால், மகிழ்ச்சியாக அறுவடையில் ஈடுபட்டனர். அதற்கேற்ப, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், 117 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்தது.
தீபாவளிக்கு முன்னதாக, கொள்முதல் செய்யப்படும் என, விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், போதுமான சுமை துாக்கும் தொழிலாளர்கள் நியமனம் செய்யாதது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து மூட்டைகளை எடுத்துச் செல்ல லாரிகள் பற்றாக்குறை போன்ற, நிர்வாக குளறுபடிகளால் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஆயிரக்கணக்கான மூட்டைகள் தேங்கின.
விவசாயிகளிடம் இருந்து நெல் வாங்காமல் தேக்கம் ஏற்பட்டதால், விவசாயிகள் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து விட்டு பல நாட்களாக காத்து கிடக்கின்றனர். பல இடங்களில் அறுவடை செய்த நெல்லை சாலைகளில் உலர வைத்தும் இருந்தனர்.
இந்நிலையில், நாகை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருவதால், சாலைகளில் உலர வைத்த நெல்லை விவசாயிகள் தார்ப்பாலின்களை போட்டு மூடி வைத்துஉள்ளனர். உலர்த்தப்பட்டு, மூடி வைக்கப்பட்ட நெல்மணிகள் மழையில் நனைந்துள்ளது.
பல ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாரான குறுவை பயிர்கள் மழைநீரில் மூழ்கி கிடக்கின்றன. பல நாட்கள் அரும்பாடுபட்டு, அறுவடை செய்து, விற்பனை செய்யும் நேரத்தில், அரசின் திட்டமிடல் இல்லாததால், நெல் மணிகள் சேதமடைந்து இழப்பை ஏற்படுத்தியிருப்பது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.