/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
நாகையில் புதுப்பொலிவு பெற்றது பொக்கிஷமான சூடாமணி விஹாரம்
/
நாகையில் புதுப்பொலிவு பெற்றது பொக்கிஷமான சூடாமணி விஹாரம்
நாகையில் புதுப்பொலிவு பெற்றது பொக்கிஷமான சூடாமணி விஹாரம்
நாகையில் புதுப்பொலிவு பெற்றது பொக்கிஷமான சூடாமணி விஹாரம்
ADDED : நவ 03, 2024 03:02 AM

நாகப்பட்டினம்:நாகையில் தமிழர்களின் வரலாற்று பொக்கிஷமான சூடாமணி விஹாரம், 7.09 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பழமை மாறாமல், பாரம்பரிய முறைப்படி புதுப்பொலிவு பெற்றுள்ளது.
சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கி.பி., 9ம் நுாற்றாண்டு முதல், நாகை முக்கிய துறைமுக பட்டினமாக சிறந்து விளங்கியது. சோழர்கள் ஆட்சியில், ஆயிரக்கணக்கான புத்த பிட்சுகள் நாகையில் தங்கி, ஆன்மிக பணியாற்றி வந்தனர்.
அப்போது, மலாய் நாடு என்றழைக்கப்பட்ட இந்தோனேஷியாவில் பிரசித்தி பெற்று விளங்கிய புத்த மதத்தைச் சேர்ந்த விஜயோத்துங்கன் என்ற அரசன், சோழ நாட்டில் வசிக்கும் தன் குடிமக்கள் புத்தரை வழிபடுவதற்காக, தஞ்சையை ஆண்ட கண்டராதித்த சோழரிடம் அனுமதி பெற்று, தன் தந்தை சூடாமணி வர்மன் பெயரில் புத்த விஹாரத்தை நாகையில் நிறுவினார்.
சோழர்களுக்கு பின் போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் சூடாமணி விஹாரம் இருந்து வந்தது.
சூடாமணி விஹாரத்தில் தங்கி ஆன்மிக பணியாற்றி வந்த பிரெஞ்சு யேசு சபையினர், புத்த விஹாரத்தின் ஒரு பகுதியை இடித்து விட்டு, ஆண்களின் கல்வியறிவுக்காக செயின்ட் ஜோசப் கல்லுாரியை கட்டி, 1844ம் ஆண்டு திறந்தனர்.
கல்லுாரியில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாததால், 1887ம் ஆண்டு, ஆங்கிலேயர்களிடம் 30,000 ரூபாய்க்கு, சூடாமணி விஹாரத்துடன் கூடிய சுற்றுவட்டாரப் பகுதியை விற்பனை செய்து விட்டு திருச்சிக்கு இடம் பெயர்ந்துள்ளனர். பின்னர் செயின்ட் ஜோசப் கல்லுாரி கட்டடம், மாவட்ட நீதிமன்றமாக மாறியது.
பல்லாயிரம் ஆண்டுகள் பாரம்பரியமிக்க பழமையான கட்டடத்தில் இயங்கி வந்த நீதிமன்றங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு இடம் மாறிவிட்டன.
சூடாமணி விஹாரத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க, மத்திய தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, 7.09 கோடி மதிப்பீட்டில் சூடாமணி விஹாரம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை, ஹெரிடேஜ் பிரிவினரால் 2022 பிப்., மாதம் துவங்கிய பணி, கடந்த மாதம் நிறைவடைந்து, நீதிமன்ற நிர்வாகத்திடம் கட்டடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது கட்டட கழிவுகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
புதுப்பொலிவு பெற்றுள்ள தமிழர்களின் வரலாற்று பொக்கிஷமான சூடாமணி விஹாரத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.