/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிரதான குழாயுடன் இணைக்காததால் குடிநீரின்றி தவிப்புபுதுச்சத்திரம் மக்களுக்கு கிடைக்குமா தீர்வு
/
பிரதான குழாயுடன் இணைக்காததால் குடிநீரின்றி தவிப்புபுதுச்சத்திரம் மக்களுக்கு கிடைக்குமா தீர்வு
பிரதான குழாயுடன் இணைக்காததால் குடிநீரின்றி தவிப்புபுதுச்சத்திரம் மக்களுக்கு கிடைக்குமா தீர்வு
பிரதான குழாயுடன் இணைக்காததால் குடிநீரின்றி தவிப்புபுதுச்சத்திரம் மக்களுக்கு கிடைக்குமா தீர்வு
ADDED : மார் 08, 2025 01:29 AM
பிரதான குழாயுடன் இணைக்காததால் குடிநீரின்றி தவிப்புபுதுச்சத்திரம் மக்களுக்கு கிடைக்குமா தீர்வு
புதுச்சத்திரம்:ராசிபுரம் அடுத்த புதுச்சத்திரம், சர்க்கார் உடுப்பம் கிராமம் எம்.ஜி.ஆர்., காலனியில் பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த, 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு நீண்ட காலமாக குடிநீர் வசதி இல்லை.
இதனால், பல கிலோ மீட்டர் துாரம் சென்று, அப்பகுதியில் உள்ள விவசாய கிணறு, பொது இடங்களில் உள்ள குழாய்களில் தண்ணீர் பிடித்து வந்தனர். இதனால், தங்கள் பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கலெக்டரிடம் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது, அப்பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், அதே பகுதியை சேர்ந்த மாற்று சமுதாயத்தினர், தங்கள் பகுதியில் இருந்து பட்டியலின சமுதாயத்திற்கு குடிநீர் இணைப்பு வழங்க கூடாது என, தடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, கிராம மக்கள், பலமுறை மனு அளித்துள்ளனர். ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று, 20க்கும் மேற்பட்டோர் குடிநீர் இணைப்பு வழங்கி, தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புதுச்சத்திரம் பி.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த குமரவேல் கூறியதாவது: நாங்கள் பட்டியலின மக்கள் என்பதால், எங்களுக்கு மாற்று சமுதாயத்தை சேர்ந்த சிலர் பிரதான குடிநீர் குழாயில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக இணைப்பு வழங்கி, எம்.ஜி.ஆர்., காலனி மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பி.டி.ஓ., முத்துலட்சுமி கூறியதாவது: உடுப்பம் எம்.ஜி.ஆர்., காலனிக்கு ஏற்கனவே உள்ளூர் நீராதாரங்களில் இருந்து உப்பு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தான் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இன்னும், பிரதான குழாயுடன் கிராமத்து பைப்புகளை இணைக்கவில்லை.
தீபாவளிக்குள் கூட்டு குடிநீர் திட்டம் முழுமையாக நிறைவடைந்து அனைத்து பகுதி மக்களுக்கும் குடிநீர் கிடைக்கும் என, அமைச்சர் மதிவேந்தன், நேற்று நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில் கூட உறுதியளித்துள்ளார். பிரதான குழாயுடன் இணைத்தவுடன், எம்.ஜி.ஆர்., காலனி பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.