பழுதான லாரியை சரி செய்ய இழுத்தடிப்புஉரிமையாளர் திடீர் தர்ணாவால் பரபரப்பு
பழுதான லாரியை சரி செய்ய இழுத்தடிப்புஉரிமையாளர் திடீர் தர்ணாவால் பரபரப்பு
ADDED : ஏப் 08, 2025 02:03 AM
பழுதான லாரியை சரி செய்ய இழுத்தடிப்புஉரிமையாளர் திடீர் தர்ணாவால் பரபரப்பு
நாமக்கல்:பழுதான லாரியை சரி செய்வதற்கு காலதாமதம் செய்ததால், ஆவேசமடைந்த லாரி உரிமையாளர், டிரைவர்களுடன் நிறுவனம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால், நாமக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் - சேலம் புறவழிச்சாலை, பாப்பிநாயக்கன்பட்டி அருகே, 'பாரத் பென்ஸ்' கனரக வாகன டீலரான, தனியார் நிறுவனம் ஒன்று விற்பனை மற்றும் பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்தில், கரூரை சேர்ந்த செந்தமிழ்செல்வன், 35, என்பவர், கடந்த, 2023ல், மூன்று லாரிகளை வாங்கியுள்ளார். அதில் ஒரு லாரி பழுதானது. அதை சரி செய்ய சர்வீஸூக்கு விட்டுள்ளார். ஆனால், அந்த லாரியை சர்வீஸ் செய்து கொடுக்காமல், ஒன்பது மாதங்களுக்கு பின், அந்நிறுவனத்தினர் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், அதே நிறுவனத்தில், '5532' வகையான புதிய மாடல் லாரியை வாங்குங்கள், இந்த லாரி நன்றாக இருக்கும் என ஊழியர்கள் கூறியதையடுத்து, செந்தமிழ்செல்வன் மீண்டும், நான்கு லாரியை வாங்கியுள்ளார். அந்த லாரியும் பிரச்னை ஆகியுள்ளது. இவற்றையும் பழுது பார்க்க கொடுத்துள்ளார். ஆனால், பழுது பார்க்கிறேன் என பல மாதங்களாக இழுத்தடித்து வந்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கான ரூபாய் இழந்ததால் மனமுடைந்த செந்தமிழ்செல்வன், இதுகுறித்து அந்த நிறுவன ஊழியர்களிடம் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் சரியான பதிலளிக்கவில்லை.
ஆவேசமடைந்த செந்தமிழ்செல்வன், லாரி டிரைவர்களுடன், தனியார் நிறுவனத்தின் நுழைவு வாயில் முன், நேற்று மதியம், 12:30 மணிக்கு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, பேச்சுவார்த்தைக்கு வந்த ஊழியரிடம், பழுதடைந்த லாரியை சரி செய்யவில்லை என்றால் மனைவி, குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்வது தவிர வேறு வழியில்லை' என, செந்தமிழ்செல்வன் கூறினார்.
தொடர்ந்து, ஒரு வாரத்துக்குள் சரி செய்வதாக உறுதி அளித்தனர். அதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
