/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அழைப்பில்லாமல் மரம் வெட்ட ஏலம் வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு
/
அழைப்பில்லாமல் மரம் வெட்ட ஏலம் வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு
அழைப்பில்லாமல் மரம் வெட்ட ஏலம் வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு
அழைப்பில்லாமல் மரம் வெட்ட ஏலம் வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு
ADDED : ஜன 22, 2025 01:22 AM
அழைப்பில்லாமல் மரம் வெட்ட ஏலம் வியாபாரிகள் எதிர்ப்பால் பரபரப்பு
ராசிபுரம்,:சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்படும் மரங்களை வெட்ட, ஏலம் விடுவதில் முறைகேடு நடப்பதாக வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராசிபுரம் நெடுஞ்சாலைத்துறையின், ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில், சாலை அகலப்படுத்தும் பணி நடக்கவுள்ளது.
இதில், ராசிபுரத்தில் இருந்து, ஆத்துார் செல்லும் பிரதான சாலையில், காக்காவேரியில் இருந்து சீராப்பள்ளி வரை, 3.371 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தப்படுகிறது. ஏற்கனவே இருந்த, 7 மீட்டர் அகல சாலை, 10 மீட்டராக அதிகரிக்கப்படுகிறது. இதனால், சாலை அகலப்படுத்தும் பணிக்கு இடையூறாக உள்ள மரங்கள், மின் கம்பங்கள் குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்தனர்.
முக்கியமாக அகற்ற வேண்டிய மரங்கள் குறித்து, வனத்துறையினருடன் இணைந்து நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்தனர். பின், வெட்டப்படும் மரங்கள் குறித்து தகவலை, மாவட்ட பசுமைக்குழுவுக்கு அனுப்பி அனுமதியும் பெற்றனர். அதன்பிறகு டெண்டர் மூலம் மரம் வெட்டும் அனுமதியும் வழங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று நாமகிரிப்பேட்டை - ஒடுவன் குறிச்சி பிரிவு ரோட்டில் புளிய மரத்தை வெட்டிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர வியாபாரிகள், 6க்கும் மேற்பட்டோர், மரம் வெட்டுபவர்களிடம் தகராறு செய்தனர். 'முறைப்படி டெண்டர் விடாமல் மரங்களை வெட்டக்கூடாது' எனக்கூறி தடுத்தனர்.
மர வியாபாரிகள் ரத்தினம், லட்சுமணன் ஆகியோர் கூறுகையில், 'ஏற்கனவே காக்காவேரி பகுதியில், 32 மரங்களை ஏலம் விட்டனர். ஆனால், ஏலம் எடுத்தவர், 50க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி விட்டார். தற்போதும், முறைப்படி டெண்டர் விடாமல் ஏற்கனவே எடுத்தவருக்கு டெண்டர் விட்டுள்ளனர். டெண்டர் குறித்து எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. செய்தித்தாள்களிலும் விளம்பரம் செய்யவில்லை' என்றனர்.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: டெண்டர் நோட்டீஸ், முறைப்படி அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. நோட்டீஸ் ஒட்டி, குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு பிறகு தான் டெண்டர் விடப்பட்டுள்ளது. நாமகிரிப்பேட்டையை சேர்ந்த மர வியாபாரிகள், அப்பகுதியில் உள்ள மரங்களை தனியாக டெண்டர் விட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். அவ்வாறு தனித்தனியாக மரங்களை ஏலம் விட முடியாது. 10 அல்லது 20 மரங்களை மொத்தமாகத்தான் ஏலம் விடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.