/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்: 294 பேர் கைது
/
மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்: 294 பேர் கைது
ADDED : ஜன 22, 2025 01:25 AM
மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்: 294 பேர் கைது
நாமக்கல்: நாமக்கல், திருச்செங்கோட்டில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில், ஆண்கள், பெண்கள் என, மொத்தம், 294 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நேற்று நடந்தது. நாமக்கல், ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட அமைப்பாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை ஆந்திரா போல், 6,000, 10,000, 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.
உதவித்தொகைக்கு விண்ணப்பித்து காத்திருப்போருக்கு உடனடியாக வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 50 சதவீதம், 4 மணி நேரம் பணி என்ற பழைய நிலையே தொடர வேண்டும். எட்டு மணி நேரம் பணிதளத்தில் இருக்க வேண்டும் என்ற புதிய உத்தரவை திரும்ப பெறவேண்டும். அனைவருக்கும், 100 நாள் வேலை முழுமையாக வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட, நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், மோகனுார், கொல்லிமலை, புதுச்சத்திரம் பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் ஆண்கள், பெண்கள் என, 160 பேரை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
அதேபோல், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, மூத்த தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். திருச்செங்கோடு, ப.வேலுார், குமாரபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த, 134 பேர் பங்கேற்றனர். அவர்களை போலீசார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
நாமக்கல், திருச்செங்கோட்டில் நடந்த மறியல், சிறை நிரப்பும் போராட்டத்தில், 294 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.